முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே கார்-பேருந்து மோதல்: ராஜபாளையம் இளைஞர்கள் இருவர் சாவு

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே செவ்வாய்க்கிழமை கார்-பேருந்து மோதிய விபத்தில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இறந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே செவ்வாய்க்கிழமை கார்-பேருந்து மோதிய விபத்தில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இறந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சந்திரன் (30). இவர், தனது நண்பர்களாக அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் மகன் சந்தனகுமார் (30), ராஜகுரு, சேது, தாமோதரன் ஆகியோருடன் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை பார்க்க காரில் திருநெல்வேலிக்கு வந்தனர்.

பின்னர் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சந்தனகுமார் ஓட்டினாராம். இதேபோல போடியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆண்டிபட்டியைச் சேர்ந்த முருகன் ஓட்டிவந்தார்.

ராமையன்பட்டியை கடந்து மானூர் அருகே நரியூத்து பகுதியில் சென்றபோது காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இதில் காரில் பயணித்த சந்திரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்ததும் மானூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த 4 பேரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்தனகுமார் இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மானூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →