தேர்வு கட்டண உயர்வு: சிதம்பரத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, சாலைமறியல்!
திருவள்ளுவர் பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் ரூ.45 லிருந்து ரூ.85 ஆகவும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் ரூ.75 லிருந்து ரூ.150 ஆகவும் கட்டணத்தை உயர்த்தி
சிதம்பரத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் ஸ்ரீராகவேந்திரா கலைக்கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் ரூ.45 லிருந்து ரூ.85 ஆகவும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் ரூ.75 லிருந்து ரூ.150 ஆகவும் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இதனை கண்டித்து சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை காலை வகுப்புகளை புறக்கணித்து சிதம்பரம்-சி.முட்லூர் புறவழிச்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், கல்லூரி முதல்வர் வணங்காமுடி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படாததால், மறியல் செய்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கலைந்து சென்றனர்.
இதேபோன்று சிதம்பரம் அருகே கீழமூ்ங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். இதனால் சிதம்பரம் புறவழிச்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.