திருச்சி விமான நிலையத்தில் 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து, திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த டைகர் ஏர்வேஸ் விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது ஒரு பயணி தனது டிராவல் பேக்கை விமான நிலையத்தின் ஒரு இடத்தில் வைத்து விட்டு வெளியில் வந்தார். இதை கவனித்த அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த முகமது காசிம் மகன் நவாஸ் கான் (35) என்பதும், இவர் கொண்டு வந்த பேக்கில் ரூ.1.80 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இந்த தங்க கடத்தலுக்கு விமான நிலைய சுகாதார அதிகாரி நடராஜன் (47) என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
Advertisement
இதைத்தொடர்ந்து நடராஜனிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பயணிகள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரும் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து பத்திரமாக வெளியில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்திருப்பதும், இந்த பணியை மேற்கொள்வதற்கு அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது கடத்தல் தங்கத்திலிருந்து கமிசன் உள்ளிட்டவை பெற்று வந்திருப்பதும் தெரியவந்தது.
இதே போல் கடந்த 13-ம் தேதி ஒருவர் கொண்டு வந்த 7 கிலோ கடத்தல் தங்கத்தை விமான நிலையத்திலிருந்து பத்திரமாக வெளியே கொண்டு கொடுத்து உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து நவாஸ் கானிடமிருந்து 7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.