முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி சுங்கத்துறை அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தில் தங்கம் திருட்டு

திருச்சி சுங்கத்துறை அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 16 கிலோ தங்கம் மாயமானது.

Updated On : 19 ஏப்ரல், 2015 at 12:08 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:41 AM

திருச்சி சுங்கத்துறை அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 16 கிலோ தங்கம் மாயமானது.

சிங்கப்பூரிலிருந்து, திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த டைகர் ஏர்வேஸ் விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த முகமது காசிம் மகன் நவாஸ் கான் (35) என்பதும், இவர் கொண்டு வந்த பேக்கில் ரூ.1.80 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இந்த தங்க கடத்தலுக்கு விமான நிலைய சுகாதார அதிகாரி நடராஜன் (47) என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

Advertisement

இதைத்தொடர்ந்து நடராஜனிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பயணிகள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரும் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து பத்திரமாக வெளியில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்திருப்பதும், இந்த பணியை மேற்கொள்வதற்கு அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது கடத்தல் தங்கத்திலிருந்து கமிசன் உள்ளிட்டவை பெற்று வந்திருப்பதும் தெரியவந்தது.

இதே போல் கடந்த 13-ம் தேதி ஒருவர் கொண்டு வந்த 7 கிலோ கடத்தல் தங்கத்தை விமான நிலையத்திலிருந்து பத்திரமாக வெளியே கொண்டு கொடுத்து  உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து நவாஸ் கானிடமிருந்து 7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கலால் மற்றும் மத்திய சுங்கத்துறை ஆணையர் ஜெயின் நேற்று இரவு 12.30 மணியளவில் கைப்பற்றப்பட்ட 7 கிலோ தங்கத்தை திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காக சென்றபோது, ஏற்கனவே பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 16 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து திருட்பட்டுள்ள தங்கத்தி்ன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புடையது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.