அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனுதாக்கல்: நாளை மறுநாள் விசாரணை
வேளாண் பொறியியல் துறை அதிகாரி தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில்
வேளாண் பொறியியல் துறை அதிகாரி தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஜாமீன் வழங்கக்கோரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு புதன்கிழமை (ஏப்.22) விசாரணைக்கு வருகிறது.
திருநெல்வேலியில் வேளாண் பொறியியல் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் முத்துக்குமாரசாமி (57). இவர், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தச்சநல்லூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
பொறியியல் துறையில் காலியாக இருந்த ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பியதில் அமைச்சர், அரசியல் கட்சி பிரமுகர்களால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகதான் அவர் தற்கொலை செய்ததாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடவேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இந்தநிலையில் அமைச்சர் பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம் செய்யப்பட்டார்.
அதன்பின்பு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு மாற்றப்பட்டதைத்தொடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி அதிகாலையில் முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தியையும், வேளாண் பொறியியல்துறை தலைமை பொறியாளர் மு.செந்திலையும் சிபிசிஐடி போலீஸார் சென்னையில் கைது செய்தனர். திருநெல்வேலி மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தினர். அவர்களை 17 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதால் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமைப் பொறியாளர் செந்தில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது அதனை தள்ளுபடி செய்து கடந்த 16 ஆம் தேதி உத்தரவிட்டார். இதன்பின்பு நீதிமன்ற காவல் முடிந்ததைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மு.செந்தில் ஆகியோரை நீதிமன்றத்தில் 17 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆஜர்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் மன்ற நீதித்துறை நடுவர் (பொ) செந்தில்குமார், விடியோ கான்பிரன்ஸ் மூலம் இருவரிடமும் விசாரணை நடத்தி, இருவருக்கும் இம் மாதம் 30 ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவரது வழக்குரைஞர் ராஜு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இம் மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.