நீர்பிடிப்பு பகுதியில் மழை: கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளும் உல்லாசமாக கோடை குதுகலாக கழித்து வருகின்றனர்.
புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 2, பாபநாசம் கீழ் அணை 5, சேர்வலாறு அணை 4, மணிமுத்தாறு அணை 1.4, கடனாநதி அணை, ராமநதி அணைகளில் அதிகபட்சமாக தலா 50, கருப்பாநதி அணை 28, குண்டாறு அணை 18, அடவிநயினார் அணை 25, நம்பியாறு அணை 15.
மேலும் இம்மாவட்டத்தில் தென்காசி 12.8, செங்கோட்டை 9, ஆய்க்குடி 40.8, ஆலங்குளம் 34.6, ராதாபுரம் 13, களக்காடு 10.2, மூலக்கரைப்பட்டி 5.2, அம்பாசமுத்திரம் 3, சேரன்மகாதேவி 2, கன்னடியன் அணைக்கட்டு 3.
நீர்மட்டம் உயர்வு: இம்மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 74.30 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 87.14 அடி, மணிமுத்தாறு அணை 85.25 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 45.50 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 33 அடியாகவும் இருந்தது. அணை மூடல்: வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்தது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் புதன்கிழமை நிறுத்தப்பட்டு அணை மூடப்பட்டது.