முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு ஒப்பந்தப்பணி, வேலை வாங்கித்தருவதாக ரூ.65 லட்சம் மோசடி: மின்சார வாரிய அதிகாரி கைது

அரசு ஒப்பந்தப்பணி மற்றும் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்த மின்சாரவாரிய அதிகாரியை கடலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:13 AM
பகிர்:

அரசு ஒப்பந்தப்பணி மற்றும் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்த மின்சாரவாரிய அதிகாரியை கடலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் உமாசந்திரன்(50). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் தான் படித்த கல்லூரியின் விழாவில் பங்கேற்றார். விழாவில், அவருடன் படித்தவரும், மேட்டூர் அணையின் மின் உற்பத்தி நிலைய உதவி செயற்பொறியாளருமான சிவானந்தம்(50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, மேட்டூர் மின் உற்பத்தி நிலையத்தில் ஒப்பந்தப்பணிகள் பெற்றுத்தருவதாக உமாச்சந்திரனிடம், சிவானந்தம் கூறியுள்ளார். இதற்காக, கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரையில் ரூ.39 லட்சத்தை உமாச்சந்திரன் வழங்கியதாக தெரிகிறது.

இதற்கிடையில், உமாச்சந்திரன் மூலமாக திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த சலீம்(49) என்பவர் சிவானந்தத்திற்கு அறிமுகமானார். அவரிடமும், மின் உற்பத்தி நிலையத்தில் சாலை அமைக்கும் பணியை பெற்றுத்தருவதாக கூறி ரூ.20 லட்சம் பெற்றுள்ளார்.அதேப்போன்று, வடலூரைச் சேர்ந்த நமச்சிவாயம்(35) என்பவரிடம் மின்சார வாரியத்தில் உதவியாளர் பணியிடம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.6 லட்சம் பெற்றுள்ளார்.பணம் தந்தவர்களை அடிக்கடி மின்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் பணிகளை காண்பித்து அப்பணிகள் அவர்களின் பெயரில் நடைபெறுவதாக கூறி வந்துள்ளார். இதற்கிடையில், உமாச்சந்திரன் தனியாக சென்று அப்பணிகள் குறித்து விசாரித்த போது அப்பணிகளை வேறொரு ஒப்பந்தக்காரர் செய்து வருவது தெரிய வந்தது.

இதனையடுத்து, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உமாச்சந்திரன், சலீம், நமச்சிவாயம் ஆகியோர் சிவானந்தத்திடம் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டனர். அவரும் பணத்தை குறிப்பிட்ட நாளில் தருவதாக கூறியதோடு, அதற்காக காசோலையும் வழங்கியுள்ளார். ஆனால், அந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திரும்பியது.

இதனையடுத்து, உமாச்சந்திரன், சலீம், நமச்சிவாயம் ஆகியோர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் லோகநாதன், ஆய்வாளர் செந்தில்விநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தி சிவானந்தத்தை வியாழக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிவானந்தம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதேப்போன்று, மேட்டூரைச் சேர்ந்த பா.ஒம்பிரகாஷ்(31) என்பவரிடம் ஒப்பந்தப்பணிகள் பெற்றுத்தருவதாக கூறி ரூ.83 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஓம்பிரகாஷ் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாரும் அளித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →