அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிர்வெடிகள் வெடிக்கத் தடை
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அதிர்வெடிகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சித்திரை வசந்த உற்சவத்தின்போது அதிர்வெடிகள் வெடிப்பது
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அதிர்வெடிகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சித்திரை வசந்த உற்சவத்தின்போது அதிர்வெடிகள் வெடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
சிவனின் அக்னி ஸ்தலமான இக் கோயிலில் நடைபெறும் விழாக்களின்போது, உற்சவ மூர்த்திகள் வீதியுலாவை பக்தர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அதிர்வெடிகள், பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். கோயில் வட திசையில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் இந்த வெடிகள் வெடிக்கப்படும்.காலம், காலமாக நடைபெற்று வந்த இந்த நடைமுறைக்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இக் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் அறநிலையத் துறையின் தொல்லியல்ஆய்வுக் குழு இக் கோயிலில் ஆய்வு நடத்தியது.
கோயிலின் பாரம்பரியம் மாறாமல் புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து இக் குழு ஆய்வு செய்தது. அப்போது, கோயில் வளாகத்தில் அதிர்வெடிகள், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிப்பதை நிறுத்துமாறு இக் குழு பரிந்துரை செய்தது.அதன்படி, இப்போது கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தில் அதிர்வெடிகள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. கோயிலில் மீண்டும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி கிடைக்குமா என்பது கோயில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகுதான் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.