விருதுநகர் அருகே பெண்ணை ஏமாற்றி நிலமோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன் மனைவி காளியம்மாள்(40). இவருக்கு விருதுநகர் அருகே சிவஞானபுரம் கிராமத்தில் சொந்தமான நிலம் உள்ளது. தன்னுடைய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் உள்ளிட்ட 3 பேர் அணுகி பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதாக கூறி பத்திரத்தை பெற்றுச் சென்றார்களாம். ஆனால், பட்டா பெற்றுத் தராமலும், பத்திரத்தையும் கொடுக்காமல் காலதாமதம் செய்வது தொடர்பாக காளியம்மாள் கேட்டுள்ளார்.
இதற்கிடையே அக்குறிப்பிட்ட இடத்தை சக்திவேல், ஞானசேகரன், முருகையா ஆகியோர் உதவியுடன், இதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், தங்கராஜ், விநாயகம் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கிராமத்தினர் காளியம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கிராமத்திற்கு நேரில் சென்று பார்க்கையில் அந்த இடத்தில் ஒரு சிலர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து கேட்டதற்கு நிலத்தை வாங்கியதாக கூறியும், தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக புதன்கிழமை ஆமத்தூர் காவல் நிலையத்தில் காளியம்மாள் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட சக்திவேல், ஞானசேகரன் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.