புதுவை பிஆர்டிசி ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) ஊழியர்கள் திங்கள்கிழமை தலைமை அலுவலகம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்..
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) ஊழியர்கள் திங்கள்கிழமை தலைமை அலுவலகம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்..
6-வது சம்பளக்குழுவின் அடிப்படையில் வழங்க வேண்டிய 35 சதவீத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 5 ஆண்டு பணி முடித்த பெண் நடத்துனர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, ஆண் நடத்துனர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
மாணவர் பேருந்துகளை பிஆர்டிசி மூலம் இயக்க வேண்டும். ஜூலை 2010-ம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்ட ஓட்டுநர், நடத்துனர்களுக்கு வழங்க வேண்டிய ஒரு மாத சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், அனைத்துப் பிரிவுகளிலும் முறையாக இட ஒதுக்கீடு செயல்படுத்த வேண்டும், காலியிடங்களை வேலைவாய்ப்பகம் மூலம்
நேர்மையான முறையில் நிரப்ப வேண்டும். காரைக்கால், புதுவையில் பிஆர்டிசி மூலம் பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ஊழியர்கள் சங்க தலைவர் ஜி.பத்மநாபன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அருணகிரி, சுப்புராஜி, ராமமூர்த்தி, வடிவேலு, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் சிஎச். பாலமோகனன், சீத்தாராமன், பிரேமதாசன், நமச்சிவாயம் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஈ.ராமமூர்த்தி நன்றி கூறினார்.