பாபநாசம் அணையில் 115 மி.மீ மழை: தாமிரவருணியில் 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் செல்கிறது
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீர் 15 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டதால் தாமிரவருணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரமாக உள்ள கோயில்கள், மண்டபங்கள், குடியிருப்புகள் மூழ்கின.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீர் 15 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டதால் தாமிரவருணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரமாக உள்ள கோயில்கள், மண்டபங்கள், குடியிருப்புகள் மூழ்கின.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 அணைகளும் நிரம்பியுள்ளன. தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பெய்து வரும் பலத்த மழையால் அணைகளுக்கு வந்து கொண்டிருந்த உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படுவதால் கடந்த 2 வாரங்களாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் நீடித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): அதிகபட்சமாக பாபநாசம் அணை-115, பாபநாசம் கீழ் அணை-55, சேர்வலாறு அணை-60, மணிமுத்தாறு அணை-33.2, கடனாநதி அணை-15, ராமநதி அணை-15, கருப்பாநதி அணை-22, குண்டாறு அணை-52, அடவிநயினார் அணை-7, நம்பியாறு அணை-17, கொடுமுடியாறு அணை-15, கன்னடியன் அணைக்கட்டு-14.
பிற பகுதியில்...திருநெல்வேலி-3, பாளையங்கோட்டை-7.8, அம்பாசமுத்திரம்-26.8, சேரன்மகாதேவி-13.2, சங்கரன்கோவில்-16, சிவகிரி-20, தென்காசி-19.8, ஆய்க்குடி-50.8, செங்கோட்டை-44, ஆலங்குளம்-19.6, ராதாபுரம்-21, நான்குனேரி-5, களக்காடு-47.2, மூலக்கரைப்பட்டி-18.3.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு சனிக்கிழமை நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5229.95 கனஅடி, சேர்வலாறு அணைக்கு 4000 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 712 கனஅடி, கடனாநதி அணைக்கு 1000 கனஅடி, ராமநதி அணைக்கு 200 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 167 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணைக்கு 100 கனஅடி, நம்பியாறு அணைக்கு 208 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 100 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
15 ஆயிரம் கனஅடி திறப்பு: மலைப் பகுதியில் மழை நீடித்ததால் சனிக்கிழமை இரவு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து உபரி்நீர் திறந்து விடப்பட்டது.
பாபநாசம் அணையில் 6 உபரிநீர் வழிந்தோடி வழியாக 7 ஆயிரம் கனஅடி, சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் 5 ஆயிரம் கனஅடி, கடனாநதி அணையில் 1200 கனஅடி, ராமநதி அணையில் 300 கனஅடியும் திறக்கப்பட்டதால் தாமிரவருணி ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் செல்கிறது.
தாமிரவருணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோரமாக உள்ள கோயில்கள், மண்டபங்கள், குடியிருப்புகள் மூழ்கின. இதனால் கரையோரமாக வசிப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பாபநாசம் கல்யாணதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் கடும் வெள்ளம் இருப்பதால் குளிக்க தடை நீடிக்கிறது. அருவிகள், அணைகளில் வனத்துறையினர், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணை நீர்மட்டம்-141.50 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம்-145.47 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம்-116.75 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 83.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம்-82.25 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம்-70.86 அடி, குண்டாறு அணை நீர்மட்டம்-36.10 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம்-132 அடி, வடக்குப்பச்சையாறு அணை நீர்மட்டம்-50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம்-22.96 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 52.50 அடியாகவும் இருந்தது.