முகப்பு
தற்போதைய செய்திகள்

நியாயவிலைக்கடை பணியாளர் தற்செயல் விடுப்பு போராட்டம்: பெயரளவிற்கே திறக்கப்பட்ட நியாயவிலைக்கடைகள்!

நியாயவிலைக் கடையிலேயே பொருள்களை எடையிட்டு வழங்காமல், இருப்பு குறைவிற்கு அபராதம் விதிக்கும் போக்கை கைவிட வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:38 AM
பகிர்:

நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினரின் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் எதிரொலி பெயரளவிற்கே கடலூர் மாவட்டம் முழுவதும் நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

நியாயவிலைக் கடையிலேயே பொருள்களை எடையிட்டு வழங்காமல், இருப்பு குறைவிற்கு அபராதம் விதிக்கும் போக்கை கைவிட வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், நியாயவிலைக்கடை திட்டப்பணிகள் அனைத்து கணினி மயமாக்க வேண்டும், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும், தமிழகஅரசு அமைத்துள்ள ஊதியக்குழுவில் எங்கள் சங்கத்தின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு பதிலாக அலுவலக ஊழியர்களை வைத்து கூட்டுறவு சங்கத்தினர் புதன்கிழமை கடைகளை திறந்து வைத்தனர். ஆனால் பொருள்கள் எதுவும் மக்களுக்கு வழங்கப்படாமல் பெயரளவிற்கே கடைகள் திறந்து வைக்கப்பட்டதால், பொருள்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து நியாயவிலைக்கடை பணியாளர் சங்க பொதுச்செயலாளர் கே.ஜெயச்சந்திரராஜா தெரிவித்தது: 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 80 சதவீத நியாய விலைக்கடை பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் நலன் கருதி பொட்டலமாக வழங்க வேண்டும், எடை குறைவாக வழங்கக்கூடாது, கணினி மயமாக்க வேண்டும் என்றும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற எங்களது கோரிக்கையையும் வலியுறுத்திதான் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நியாய விலைக்கடை பணியாளர்கள் அதிகாரிகளால் மிரடப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்க அலுவலக ஊழியர்கள் மூலம் கடைகள் திறக்கப்பட்ட எந்த பொருள்களும் வழங்கப்படாமல் பெயரளவிற்கே கடைகள் திறக்கப்பட்டிருந்தன என கே.ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.