ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற்றால் திமுக வெற்றி பெறும் என்றார் திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலருமான கனிமொழி.தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் திமுக உள்பட பல்வேறு கட்சிகள் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல, ஸ்ரீரங்கம் தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை நியாயமாக நடத்தினால் திமுகதான் வெற்றி பெறும்.
இந்த ஆட்சியில் மாணவர் பிரச்னை, மக்கள் பிரச்னை உள்பட எந்தப் போராட்டமாக இருந்தாலும், அவர்களை அழைத்து பேசி தீர்வு காண்பதற்கு அக்கறை காட்டப்படுவதில்லை. அமைச்சரவை முழுவதும் ஸ்ரீரங்கத்தில்தான் இருக்கிறது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேசுவதற்குக் கூட ஆளில்லை. இப்படிப்பட்ட ஆட்சி நீடிக்க வேண்டுமா என மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றார் கனிமொழி.
முன்னதாக, அவர் தஞ்சாவூரில் திமுகவை சேர்ந்த முன்னாள் நகர் மன்றத் தலைவர் இறைவனின் மருமகன் செந்தில்வேலன் விபத்தில் உயிரிழந்ததால், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.