முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.6,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது

தூத்துக்குடியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 6500 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஆய்வாளர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

தூத்துக்குடியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 6500 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஆய்வாளர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஜெயபால். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் தாளமுத்துநகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு சுந்தரவேல்புரத்தில் உள்ள மின்வாரிய ஊரக உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனு செய்திருந்தாராம்.

இந்த மனு மீது பரிசீலனை செய்த மின்வாரிய வணிக ஆய்வாளர் அஜய் விஜய் மகாராஜன் (43) புதிய மின் இணைப்பு வழங்க வேண்டுமானால் ரூ. 6500 லஞ்சமாக தர வேண்டும் என அந்தோணி ஜெயபாலிடம் கூறினாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாததால் இதுகுறித்து தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் அந்தோணி ஜெயபால் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் சர்ஜன் ராஜன் ராய் ஆலோசனையின்பேரில், சுந்தரவேல்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வைத்து வணிக ஆய்வாளர் அஜய் விஜய் மகாராஜனிடம் ரூ. 6500 ரொக்கத்தை அந்தோணி ஜெயபால் வழங்கினாராம்.

அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் லஞ்சம் வாங்கிய அஜய் விஜய் மகாராஜனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் அஜய் விஜய் மகாராஜனின் அலுவலக இருக்கை மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.