ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்
பழனியை அடுத்த பெரியகலையமுத்தூரில் அருள்மிகு ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கமிட்டியார் சார்பில் வருடம் தோறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு
பழனியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த அனுமதி கோரி பெரியகலையமுத்தூர் கிராம மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழனியை அடுத்த பெரியகலையமுத்தூரில் அருள்மிகு ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கமிட்டியார் சார்பில் வருடம் தோறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த விளையாட்டின் போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு மாடுகள் பங்கேற்பதும், அதை அடக்க வீரர்கள் வருவதும் சிறப்பம்சமாகும். கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போது கோயில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை அணுகியும், கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.பின்னர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து தமிழர்களின் வீர விளையாட்டான இதை நடத்த அனுமதிக்க கோரி பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் பெரிய கலையமுத்தூர் கிராமத்தினர் ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கவும், நீதிமன்றம் இதற்காக சிறப்பு சட்டம் இயற்றவும் கோரி பல்வேறு மனுக்கள் வழங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை பழனி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்க மாநில எம்பி.,க்கள் டெல்லி சென்று மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்தவும், தனி சட்டம் இயற்றவும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது.