நெற்பயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்!
கடலூர் மாவட்டம் டெல்டா பகுதிகள் மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளிலும் சம்பா நெற்பயிர்களில் பூ மற்றும் முதிர்ச்சி பருவத்தில் உள்ளது. காற்றில் ஈரப்பதம் இருப்பதாலும், இடையிடையே மழை பெய்வதாலும், பனிப்பொழிவினாலும், அதிக இடைவெளி இல்லாது சரியான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டுள்ளதாலும் ஆங்காங்கே நோய் தாக்குதல்கள் காணப்படுகின்றன.
கடலூர் மாவட்டம் டெல்டா பகுதிகள் மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளிலும் சம்பா நெற்பயிர்களில் பூ மற்றும் முதிர்ச்சி பருவத்தில் உள்ளது. காற்றில் ஈரப்பதம் இருப்பதாலும், இடையிடையே மழை பெய்வதாலும், பனிப்பொழிவினாலும், அதிக இடைவெளி இல்லாது சரியான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டுள்ளதாலும் ஆங்காங்கே நோய் தாக்குதல்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக கழுத்துக் குலை நோய், லஷ்மி நோய் (எடைப்பழம் உருவாகுதல்), இலைப்புள்ளி நோய் ஆகிய நோய்கள் அதிகமாக காணப்படுகின்றனர். மேற்கண்ட நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் தெரிவித்தது: 1)-கழுத்துக்குலை நோய்: இந்நோய் பூ பருவம் முதல் அறுவடை வரை உள்ள காலத்தில் உண்டாகும். இந்நோய் ஏற்பட்டால் வெளிவந்த பூக்கள் முழுவதும் பதராகி வெள்ளை நிறமாக காணப்படும். இத்தகைய கதிர்களின் கழுத்துப்பகுதியை உற்று நோக்கினால் பழுப்பு நிறத்தில் காய்ந்தது போன்று காணப்படும்.
பொதுவாக இளம் பருவத்தில் குலை நோய் ஏற்பட்டால் இலைகளில் நீள் வட்டத்தில் கண் வடிவ புள்ளிகள் ஏற்படும். ஆனால் கழுத்துக்குலை நோய் ஏற்படும் போது இலைகளில் புள்ளிகள் ஏற்படுவதில்லை. கட்டுப்படுத்தும் முறை: கழுத்துக் குலை நோய் ஏற்பட்டால் டிரைசேக்ளசோல் 75% SP - 120 கிராம் ஏக்கருக்கு பயன்படுத்தலாம். டெபுகனோசோல் (நேடிவோ) 50% + டிரைபியாக்சிஸ்ட்ரோபிஸ் 25% - 200 மிலி ஏக்கருக்கு பயன்படுத்த வேண்டும். 2)- லஷ்மி நோய் (False smut disease): இந்நோய் ஏற்பட்டால் நல்ல மகசூல் உறுதி என்பதால், இந்நோய்க்கு இப்பெயர் விவசாயிகளால் வழங்கப்படுகிறது. எனினும் இந்நோய் ஏற்பட்டால் கதிர்களில் ஏற்படும் பழ வடிவ பூஞ்சான வித்துக்களால் நெல் மணிகள் நிறம் மாறி கரும்பு நிறமாக மாறிவிடும். இதனால் நெல்லுக்கான விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. கட்டுப்படுத்தும் முறை: புரோபிகனசோல் 200 மி.லி ஏக்கருக்கு தெளித்து லஷ்மி நோய் பரவுவதை தடுக்கலாம்.
மேலும் இப்பூஞ்சான மருந்தானது நெல் மணிகளில் பூஞ்சானம் வளராமல் தடுப்பதால், நெல் மணிகள் பொன் நிறமாக இருப்பதுடன் நல்ல எடையுடன், திரட்சியான நெல் மணிகள் ஏற்படும். 3)- இலைப்புள்ளி நோய்: சம்பா நெற்பயிர் உரமிடப்படாமலோ, நீர் பாய்ச்சப்படாமலோ இருந்து இலைகள் வெளிர் பச்சையாக இருந்தால் இலைப்புள்ளி நோய் ஏற்படும். செவ்வக வடிவ செம்புள்ளிகள் இலைகளில் ஏற்பட்டு இலைகள் நுனியிலிருந்து காயத் தொடங்கும். கட்டப்படுத்தும் முறை: இந்நோய் தென்பட்டால் கார்பன்டைசிம் 100 கிராம் ஏக்கருக்கும் அல்லது மேன்கோசெம் 400 கிராம் ஏக்கருக்கும் தெளித்து கட்டபடுத்தி உடன் பாசனம் செய்து மேலுரமிடுதல் அவசியமாகும். பூச்சிதாக்குதலை தடுக்க பராமரிக்கும் முறைகள்: நெற்பயிர்கள் பூக்கும் பருவத்தில் மருந்து அடிக்கும் போது முற்பகலில் (காலை 8-11) மருத்தடிக்காமல் பிற்பகலில் மருந்து அடிப்பது நல்லது. முற்பகலில் கதிரில் நெல்மணிகள் விரிந்து மஞ்சள் நிற மகரந்தங்கள் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் (மகரந்த சேர்க்கை நேரம்). முற்பகல் 11 மணிக்கு மேல் நெல் மணி பூக்கள் இயல்பாகவே முடிக்கொண்டிருக்கும்.
மேலும் பயிர் பூ பருவம் அடைந்து விட்டால் விசைத்தெளிப்பான் தவிர்த்து, கைத்தெளிப்பாள் கொண்டுதான் மருந்து அடிக்க வேண்டும். பூ பருவத்தில் மருந்தடிக்கும் போது ஒட்டும் பசை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி என்ற வீதத்தில் சேர்த்து தெளிப்பது நலம் பயக்கும். பூக்கும் தருணத்தில் நோய்களை வந்த பின்பு கட்டுப்படுத்துவதை விட வரும் முன்பு தவிர்த்தல் மிகச்சிறந்தது. இவ்வாறு தவிர்க்க நினைக்கும் விவசாயிகள் பயிர் பூ பருவம் அடையும் முன்னரே, பூ தொண்டையில் இருக்கும் போதே சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 1 கிலோ ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம் அல்லது கார்பண்டசிம் 100 கிராம் அல்லது புரோபிகனோசோல் 200 மிலி ஆகியவற்றை தெளித்து பயன்பெறலாம் என்கிறார் எஸ்.ரமேஷ்.