திருவள்ளுவர் கருத்துகளை பின்பற்றினால் சிறைச் சாலைகளே தேவைப்படாது: நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்
திருவள்ளுவர் கருத்துகளை அனைவரும் பின்பற்றியிருந்தால் சிறைச்சாலைகளே தேவைப்படாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவள்ளுவர் கருத்துகளை அனைவரும் பின்பற்றியிருந்தால் சிறைச்சாலைகளே தேவைப்படாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதி கரு.கலைக்கண்ணன் வடித்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிறை கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் வரவேற்றார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.ராதிகா தலைமை வகித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேசியது: கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ஆயுள் கைதி உருவாக்கிய திருவள்ளுவர் சிலையை திறப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சிறையில் உள்ளவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. வெளியில் உள்ளவர்கள் அனைவரும் நிரபராதிகள் என கருத முடியாது என நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். விழாவில் துணை கண்காணிப்பாளர் ஆர்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருவள்ளுவர் சிலையை வடித்த ஆயுள் தண்டனை கைதி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வதிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கரு.கலைக்கண்ணன் (31). இவர் 2007-ம்ஆண்டு ரேவதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இலக்கியா, குணா, செளமியா என்ற குழந்தைகள் உள்ளனர். கலைக்கண்ணன் கோபு சுதை வேலை மற்றும் சிற்பத் தொழில் செய்து வந்தார். தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுதில்லியிலும் சிற்ப வேலைகள் செய்துள்ளார். இந்நிலையில் கலைக்கண்ணனுக்கும், மனைவி ரேவதிக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், ரேவதி தற்கொலை செய்து கொண்டார். சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருதி இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். சிறையில் தண்டனை பெற்று வந்த முதலில் தனிமைப்படுத்தப்பட்டதை எண்ணி மிகவும் மனவேதனையில் இருந்தார். அப்போது சிறை கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் அவரது சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகியவற்றை அறிந்து அவரது திறமையை வெளிக்கொணர ஊக்கம் அளித்தார். அந்த ஊக்கத்தில் அழகிய திருவள்ளுவர் சிலையை வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை வடித்த ஆயுள்தண்டனை கைதிக்கு திறப்பு விழாவிற்கு அழைத்து வரப்படவில்லை.