முகப்பு
தற்போதைய செய்திகள்

தொலைதூர பார்வையுடன் எழுதப்பட்டது திருக்குறள்: அண்ணாமலைப் பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா

2 ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் திருக்குறள் பற்றி பல்வேறு புதிய தகவல்கள், ஆராய்ச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. 2 ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்று பேசக்கூடிய வகையில் தொலைதூர

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

2 ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் திருக்குறள் பற்றி பல்வேறு புதிய தகவல்கள், ஆராய்ச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. 2 ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்று பேசக்கூடிய வகையில் தொலைதூர பார்வையுடன் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத் தமிழ்ப்பிரிவு சார்பில் திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம் பல்கலைக்கழக ஹைடெக் ஹாலில் புதன்கிழமை நடைபெற்றது. 

கருத்தரங்கில் பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா தலைமை வகித்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் 133 பேர் கருத்தரங்கில் சமர்பித்த ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு திருக்குறள் அறம், திருக்குறள் பொருள், திருக்குறள் இன்பம் என்ற மூன்று நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசியதாவது:

திருக்குறள் இதுவரை 27 மொழிகளில் மொழி பெயர்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான ராஜாராம் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அண்ணாமலைப் பல்கலையில் வெளியிட்டார். திருக்குறள் கருத்துகளை வாழ்க்கையில் ஒரு சதம் கடைபிடித்தாலே பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பல்கலைக்கழக இணையதளம் முகப்பு பக்கத்தில் தினம் ஒரு திருக்குறளை வெளியிட்டு வருகிறோம். வாழ்க்கை, உறவு, கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்தை பற்றியும் திருக்குறளில் உள்ளது.

சமீபத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், 10 சதவீத பல்கலைக்கழகங்களே ஏ கிரேடு அந்தஸ்டு பெற்றுள்ளது. அதில் அண்ணாமலைப் பல்கலையும் ஒன்று என்பதில் பெருமையடைகிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலத்தில் 1991-க்கு பிறகு நூலக ஆலோசனைக் கமிட்டி அமைக்கப்பட்டு முதன் முதலாக கூட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை அண்ணாமலைப் பல்கலை மேற்கொண்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்களின் பங்கு முக்கியமாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அணணாமலைப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான முன்னாள் மாணவர்கள் உள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தவிர வேறு எங்கும் அதிக மாணவர்கள் படித்தவர்கள் இருக்க மாட்டார்கள். எனவே முன்னாள் மாணவர்கள் அனைவரும் இந்த சங்கத்தில் சேர்ந்து பல்கலைக்கழக வேலைவாய்ப்பு, வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் உள்ள நூலகத்தில் பழைய வாந்த தமிழ்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1965 முதல் தமிழ்த்துறையில் மொழி ஆய்வு மையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தமிழ்த்துறை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

மேலும் கருத்தரங்க தொடக்கவிழாவில் பல்கலைக்கழக அலுவலகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றில் பொருத்த திருக்குறள் பதித்த பலகையை நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெளியிட, இந்திய மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் பெற்றுக்கொண்டார். பின்னர் மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் வாழ்த்துரையாற்றினார். அவர் பேசியது: திருக்குறளில் 'னி'(345 இடங்களில்) என்ற எழுத்து மிகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 32 எழுத்துகள் பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்தப்படாத  எண் என வி.திருவள்ளுவன் தெரிவித்தார்.

தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ராம.சந்திரசேகரன் முன்னிலை வகித்துப் பேசினார். தமிழியல் துறை தலைவர் முனைவர் ப.ஞானம் வாழ்த்துரையாற்றினார். முனைவர் பெ.வைரமூர்த்தி நன்றி கூறினார். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறைத் தலைவர் அ.ஆனந்தநடராஜ தீட்சிதர், பேராசிரியர் ஏ.வி.ரங்காச்சாரியார், வடஅமெரிக்காவைச் சேர்ந்த அறவாழி ராமசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், துணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன், முன்னாள் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் டி.ராஜவன்னியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமர்வுத் தலைவர்களாக பேராசிரியர்கள் அ.ஆனந்தநடராஜன், அ.வே.ரங்காச்சாரியார், தமிழியல்துறை பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி, கிருஷ்ணகிரி அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் ந.பழனிவேலு, தமிழ்ப்பிரிவு உதவிப் பேராசிரியர் முனைவர் அ.அன்பு ஆகியோர் தலைமை ஏற்று கருத்தரங்க அமர்வுகளை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.