முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் மாங்கனித் திருவிழா:  ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து பக்தர்கள் வழிபாடு

காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவின்போது, பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவின்போது, பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. சிவபக்தராக இருந்து வாழ்ந்த காலம், பரமதத்தரை மணம் முடித்தது, இரண்டாவது திருமணம் செய்துகொண்டு கணவரே தம் பாதத்தில் வீழ்ந்து வணங்கியதை ஏற்கமுடியாமல், பேய் உருவம் வேண்டிப் பெற்று இறைவன் வீற்றிருக்கும் கயிலாயத்தை காலால் நடந்து செல்வது ஆகாதென்று தலைக்கீழாக கைகளை ஊன்றி சிவபெருமானை கண்டார் புனிதவதியார். இவரின் பக்தியை மெச்சும் வகையில் தாய், தந்தையரற்ற இறைவன் (சிவபெருமான்) அம்மையே என்றழைத்தார். இவ்வாறு பெருமைகொண்ட அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை  விளக்கி, காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 29-ம் தேதி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்து இரவு பரமதத்தர் (மாப்பிள்ளை) அம்மையார் கோயிலுக்கு அழைத்துவரப்பட்டார். 30-ம் தேதி காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உத்சவம் நடைபெற்று, மாலை பரமதத்தரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே நாளில் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீ பிச்சாண்டவருக்கு வெள்ளை சாற்று செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீ பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்றது.  சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் வீட்டுக்கு உணவு சாப்பிட செல்லும் நிகழ்ச்சியை விளக்கும் வகையில் மாங்கனியுடன் பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் காலை 9.30 மணியளவில் வீதியுலா புறப்பாடு தொடங்கியது. 

சப்பரம் புறப்பாடு தொடங்கியது முதல் ஒவ்வொரு வீடுகள், கட்டடங்களின் மேல் நின்றவாறு மக்கள், பக்தர்களை நோக்கி மாங்கனிகளை வீசினர்.  திருமணமாகவேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும் உள்ளிட்ட வேண்டுதல் செய்துகொண்டவர்கள், இறைக்கப்படும் மாங்கனியை பிடித்து இறைவனின் பிரசாதமாக கருதி வீட்டுக்கு கொண்டுசென்றனர். நேர்த்திக்கடன் செய்து வெற்றிகண்டவர்கள் பலரும் மாங்கனிகளை இறைத்தனர்.

பக்தர்களில் சிலர் வலை தயாரித்து அதன் மூலம் மாங்கனிகளை பிடித்தனர்.  சப்பரத்தின் முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்ல, பிச்சாண்டவர் சப்பரம் பக்தர்கள் மத்தியில் மிதந்தவாறு சென்றது. பக்தர்கள் அர்ச்சனை தட்டில் பட்டு வஸ்திரம், மாங்கனி வைத்து பிச்சாண்டவரை வழிபாடு செய்தனர்.

திருவிழாவையொட்டி காரைக்கால் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.  தெருவெங்கும் பரவலாக பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் உணவுப் பொட்டலங்கள், நீர்மோர், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ்.கே.பன்னீர்செல்வம், ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி செய்திருந்தனர்.

வெளியூரில் இருந்து மாங்கனி வரத்து: பிரசித்திப் பெற்ற மாங்கனித் திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்த விலை முதல் விலை உயர்ந்த மாங்கனிகள் பலவும் கடந்த சில நாள்களாக காரைக்கால் நகருக்கு வியாபாரிகள் கொண்டுவந்து விற்கத் தொடங்கினர். மாங்கனி இறைப்பதற்காகவும், விருந்தினர்களுக்கு விருந்து உபசரிப்பின்போது வைக்கவும் ஏராளமானோர் மாங்கனிகளை வாங்கிச் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →