முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சமுதாய மோதல்கள்: பள்ளிகளுக்குச் சென்று அறிவுரை வழங்கிய போலீஸார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் பேருந்துகளில் மாணவர்கள் அண்மையில் தொடர்ந்து செய்யும் செயல்பாடுகள் சாதி மோதல்களாக உருவாகி

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சமுதாய மோதல்கள்: பள்ளிகளுக்குச் சென்று அறிவுரை வழங்கிய போலீஸார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் பேருந்துகளில் மாணவர்கள் அண்மையில் தொடர்ந்து செய்யும் செயல்பாடுகள் சாதி மோதல்களாக உருவாகி

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் பேருந்துகளில் மாணவர்கள் அண்மையில் தொடர்ந்து செய்யும் செயல்பாடுகள் சாதி மோதல்களாக உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க பள்ளிகளுக்கே வியாழக்கிழமை போலீஸார் சென்று மாணவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி மற்றும் தியாகராஜா மேல்நிலைப் பள்ளிக்களுக்குச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் பக்தவச்சலம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகையில் கூறியதாவது:

கான்சாபுரம், கூமாப்பட்டி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ மாணவியர் தினமும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் பயணித்து இப் பள்ளிகளுக்கு வந்து செல்கிறார்கள்.இவர்கள் செல்போன்களில் தங்களது சமுதாயத் தலைவர்களின் பாடல்களை அதிக சத்தத்துடன் வைத்துக் கேட்கிறார்கள். தங்களது சமுதாயத் தலைவர்கள் படம் பொறித்த பனியன்களை அணிந்து செல்கிறார்கள். சமுதாயம் சார்ந்த கட்சிகளின் கொடிகளில் உள்ள வர்ணங்களை கைகளில் வளையங்களாக அணிந்து செல்கிறார்கள். சமுதாயத் தலைவர்கள் பிறந்தநாளை பேருந்துகளில் கொண்டாடி இனிப்பு வழங்குகிறார்கள். மற்ற சமுதாயப் பெண்களை கேலி செய்கிறார்கள். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் சமுதாய மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது.

இது போன்ற குற்றச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடுவோர் யாராய் இருந்தாலும் காவல்துறை நடுநிலையோடு செயல்பட்டு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மாணவர்கள் படிக்கும் காலங்களில் தங்களது படிப்பில் முழு கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பிரச்னைக்குரிய வழித் தடங்களில் இயங்கும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு குடும்பத்திற்கும், படிக்கும் கல்வி நிறுவனத்திற்கும் நல்ல பெயரை பெற்றுத் தர வேண்டும் என்றார் அவர்.

அப்போது சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜி.எட்வின் கனகராஜ், தியாகராஜா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →