அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: முதல்வர் ரங்கசாமி
புதுவையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 1 மாதத்தில் நிரப்பப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 1 மாதத்தில் நிரப்பப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து புதுவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. இதற்கிடையே பள்ளிகளில் புதுவகுப்பு புகு விழா நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி முதல்வர் தொகுதியில் உள்ள கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுவகுப்பு புகு விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார்.
மாணவ, மாணவியருக்கு சீருடைகளை வழங்கி முதல்வர் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரியில் ஏழை, எளிய மாணவ, மாணவியர் தரமான கல்வி பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரியவர்களின் ஆசியோடு பள்ளி திறக்கும் நாளில்
வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதற்காக புதுவகுப்பு புகு விழா நடத்தப்படுகிறது. நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகள் அதிக தேர்ச்சி ஈட்டின. கதிர்காமம் அரசுப் பள்ளியும் 100 சதம் தேர்ச்சி பெற்றது. இதற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டுகிறேன்.
பிளஸ் டு தேர்வில் தான் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். வரும் ஆண்டில் அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். முன்மழலையர்,
ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் 1 மாதத்தில் நிரப்பப்டும்.
கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகிலேயே அரசு மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கு நாம் பயில வேண்டும் என்ற நோக்கத்தை மாணவர்கள் வளர்க்க வேண்டும்.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 119 பேர் இறுதியாண்டு தேர்வு எழுதினர். இதில் 110 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு மருத்துவக் கல்லூரி தரமானதாக செயல்படுகிறது.
புதுச்சேரி சிறந்த கல்விக் கேந்திரமாக விளங்கி வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமரே பாராட்டி உள்ளனர் என்றார் ரங்கசாமி.பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பார்த்தசாரதி, எம்.எல்.ஏக்கள், வாரியத் தலைவர்கள்,உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் அருகாமையில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளி மாணவர்களும் இதே விழாவில் கலந்து கொண்டனர்.