தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசு அமைக்க நிலம் தயார் என அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தை (எய்ம்ஸ்) மத்திய அரசு அமைப்பதற்கு அரசு நிலம் தயாராக உள்ளதாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தை (எய்ம்ஸ்) மத்திய அரசு அமைப்பதற்கு அரசு நிலம் தயாராக உள்ளதாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எய்ம்ஸ் மையத்தை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாகத் தொடங்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையில் தமிழகம், பஞ்சாபம், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ மையம் (எய்ம்ஸ்) போன்று மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ மையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதமே பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். 2014-15-ஆ்ம் நிதியாண்டிலேயே இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
5 இடங்களில் நிலம் தயார்:
எய்ம்ஸ் மையத்தை மத்திய அரசு அமைக்கத் தேர்வு செய்வதற்காக செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவ்ட்டம் செங்கிபட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து எய்ம்ஸ் மையத்தை அமைக்கலாம் என பிரதமருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். சாலை-ரயில் வசதி, தண்ணீர்-மின்சார வசதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் இந்த 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
உயர் தர மருத்துவக் கல்வி:
தமிழகத்தில் எய்ம்ஸ் மையம் விரைவாக அமையும் நிலையில், மாணவர்களுக்கு தரமான மருத்துவக் கல்வி, பொது மக்களுக்கு தரமான மருத்துவ சேவை, மருத்துவ நிபுணர்களுக்கு ஆராய்ச்சி வசதி ஆகியவை கிடைக்கும். எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மையத்தை அமைக்கும் மத்திய அரசின் முயற்சிகள் அனைத்துக்கும் விரைவான ஒத்துழை்ப்பு அளிக்கத் தயார் என சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.