வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரம்: சிபிஜ விசாரிக்க அரசுப்பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
வேளாண்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அரசுப் பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் கு.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேளாண்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அரசுப் பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் கு.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தருமபுரி பெரியார் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண் உதவி பொறியாளராக பணியாற்றிவர் முத்துகுமாரசாமி. அண்மையில் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் பணிபுரிந்த மாவட்டத்தில் வேளாண்துறையில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப ஆட்சியர் உள்ளடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரசு ஆணைப்படி அப்பணியிடங்கழை நிரப்பியது. ஆனால், மாறாத வேளாண்துறை அமைச்சகத்திலிருந்து தாங்கள் பரிந்துரைத்த பட்டியல்படி பணி நியமனம் செய்ய வற்புறுத்தப்பட்டது.
இதனால் கடுமையான மன வேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். வேளாண்துறை அமைச்சகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட கோப்புகள், தொடர்வற்புறுத்தலால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து தொடர்புடைவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். வேளாண்துறை போன்று போக்குவரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் அரசு விதிகள் படி அதிகாரிகளை செயல்படவிடாமல், அதிகாரம் படைத்தவர்கள் தலையிடும் போக்கு உள்ளது. இதை ஆளும் அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்த வருகிற 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதேபோல, கடந்த 4-ஆம் தேதி சாலைப்பணியாளர்களின் 15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அர்ஜூனன் சேலம் மாவட்டம், எடப்பாடி சிலரால் தாக்கப்பட்டார். இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிற 17-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதேபோல, அரசுப் பணியாளர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, மதுரை, கடலூர், நெல்லை, திருச்சி, தஞ்சை ஆகிய மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.