ஜம்மு-காஷ்மீர் பிரிவனைவாதத் தலைவர் விடுதலை விவகாரம்: மாநில நலனை நன்கு உணர்ந்தவர் எடுத்த முடிவாகவே பார்க்கவேண்டும்: எம்.எச்.ஜவாஹிருல்லா
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவரான மஸரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தை, அம்மாநில நலனை நன்கு உணர்ந்தவர் எடுத்த முடிவாகவே கருதவேண்டுமென
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவரான மஸரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தை, அம்மாநில நலனை நன்கு உணர்ந்தவர் எடுத்த முடிவாகவே கருதவேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வான எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
காரைக்காலில் நிகழ்ச்சியொன்றில் திங்கள்கிழமை பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
இலங்கை பிரதமர் ரனில்விக்ரமசிங்கே தமிழக மீனவர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்து தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைசச்ர் சுஷ்மா சுவராஜ் அவருக்கு கடும் கண்டனம் தெரிவிக்காமல், மனிதாபிமானத்துடன் மீனவர் பிரச்னையை பார்க்கவேண்டுமென மென்மையாக பேசியிருக்கிறார். இம்மாதிர் அணுகுமுறை தமிழக மீனவர்கள் நலனுக்கு உகந்ததாக இருக்க வாய்ப்பில்லை. வலிமையான பிரதமர் நரேந்திரமோடி என்றார்கள். இந்த ஆட்சியில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த ஒரு படகைக்கூட இந்த அரசால் மீட்க முடியவில்லை. உள்நாட்டு மீனவர்கள் பாதிக்கும் வகையில் மீனாகுமாரி அளித்திருக்கும் அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவேண்டும். இலங்கைக்கு பிரதமர் மோடி செல்லும்போது, ஈழத் தமிழர்கள் உரிமைகள் காக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான உறுதியை பெறவேண்டும்.
புதுச்சேரியில் இளைஞர்கள் மதுவினால் சீரழிகிறார்கள். இம்மாநிலத்தில் மதுவை முழுமையாக தடை செய்யவேண்டும். புதுச்சேரியில் வக்பு வாரியத்தை, அமைக்கவுள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையுடன் சேர்க்கவேண்டும். வக்பு வாரிய சொத்துகள் சிலரால் ஆக்கிரமிக்கப்படுவதாக புகார் எழுகிறது. முத்தவல்லிகள், ஜமாஅத்தார்கள், த.மு.மு.க உள்ளிட்ட அமைப்பினர் கொண்ட புதிய குழுவை புதுச்சேரி அரசு அமைத்து, சொத்துகளை காக்கவேண்டும். புதுவையில் 7 சதவீதத்துக்கு மேல் முஸ்லிம்கள் உள்ளதால், இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுள்ள 2 சதத்தை உயர்த்தி வழங்கவேண்டும்.
காரைக்காலில் சுகாதார வசதியின்மையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. புதுச்சேரியில் ராஜிவ்காந்தி மருத்து காப்புறுதித் திட்டத்தை தொடரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி வரி கொடா போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, இம்மாநிலத்தில் பிடிபி-பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. அம்மாநில முதல்வரை பாஜக ஏற்றுள்ளது. இம்மாநிலத்தின் நலன் குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் நன்கு அறிந்தவர். எனவே மாநில நலன் சார்ந்தே அவர் முடிவெடுத்திருப்பார் என்றே இப்பிரச்னையை பார்க்கவேண்டும் என்றார் ஜவாஹிருல்லா. பேட்டியின்போது மமக மாவட்ட செயலர் நைனாமுகம்மது, தமுமுக மாவட்ட செயலர் அப்துல்ரஹீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.