நெல்லையில் குளிர்பான நிறுவன விரிவாக்கம்: கண்டித்து த.மா.கா நூதனப் போராட்டம்
கங்கைகொண்டானில் தனியார் குளிர்பான நிறுவனம் விரிவாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் கறுப்புத்தணி கட்டியவாறு வந்த த.மா.கா. இளைஞரணியினர் திங்கள்கிழமை குளிர்பானத்தை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கங்கைகொண்டானில் தனியார் குளிர்பான நிறுவனம் விரிவாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் கறுப்புத்தணி கட்டியவாறு வந்த த.மா.கா. இளைஞரணியினர் திங்கள்கிழமை குளிர்பானத்தை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் குளிர்பான நிறுவனம் விரிவாக்கம் செய்யவும், புதிய குளிர்பான ஆலை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணியினர் வந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் தனியார் குளிர்பான நிறுவனங்கள் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் நீரை தாமிரவருணி நதியிலிருந்து எடுத்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர், பாசனத் தேவையை பூர்த்தி செய்து வரும் தாமிரவருணி நதி வற்றாத ஜீவநதியாக திகழ்ந்து வருகிறது.
தொடர்ந்து தாமிரவருணியிலிருந்து நீரை உறிஞ்சினால் இவ்விரு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படவாய்ப்புள்ளது. ஆகவே புதிய குளிர்பான நிறுவனம் அமைக்கவும், குளிர்பான நிறுவன விரிவாக்கம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய உ. ராஜீவ்காந்தி உள்ளிட்ட இளைஞரணியினர் வாயில் கறுப்புத்துணி கட்டி கையில் வைத்திருந்த குளிர்பானங்களை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.