சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் விடியல் விழா தொடங்கியது
சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் இருநாள் விடியல் விழா 2015 சனிக்கிழமை காலை தொடங்கியது.
சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் இருநாள் விடியல் விழா 2015 சனிக்கிழமை காலை தொடங்கியது.
கடலூர் மாவட்டம் கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மார்ச் 21, 22 ஆகிய இருநாட்கள் விடியல் விழா நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மங்கலஇசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
பீச் வாலிபால் போட்டியை சிதம்பரம் உதவிஆட்சியர் (பொறுப்பு) தினேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிள்ளை பேரூராட்சி தலைவர் செ.வித்தியாதித்தன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கே.தமிழரசி, பேரூராட்சி செயல்அலுவலர் செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் கடற்கரையில் கபடி போட்டி, யோகா போட்டி, மாணவ, மாணவியர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, பாரா செயிலிங் என்ற பாராசூட்டில் பறக்கும் சாகச நிகழ்ச்சி, பரதநாட்டியம், சின்னத்திரை பிரபலங்களின் பல்சுவை நிகழ்ச்சி, வாணவேடிக்க உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரவு 9 மணி வரை நடைபெற்றன. இந்த விடியல் விழா ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்டு களித்தனர். அலங்கரிக்கப்பட்ட படகுகளின அணிவகுப்பு, கைவினப் பொருள்களின் விற்பனை, பாரம்பரிய உணவு பொருள்களின் விற்பனை, மீன் கண்காட்சிகம் ஆகியவை விடியல்விழாவில் இடம் பெற்றிருந்தன.
இரண்டாம் நாளான இன்று (மார்ச் 22-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அண்ணாமலைப் பல்கலை. இசைத்துறையின் சார்பில் பூபாள ராகத்துடன் சூரிய உதயத்தை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் பங்கேற்கின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் விடியல்விழாவை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகிறார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.ஆர்.லிங்கம் நன்றி கூறுகிறார்.
இதனை தொடர்ந்து யோகாசனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம் போன்ற கிராமிய வீரவிளையாட்டுகள் நடைபெறுகிறது. பின்னர் கயாக்படகு போட்டி, கனோயிங் படகு போட்டிகள் உள்ளிட்ட நீர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்புகள், போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கடலூரிலிருந்து முடசல்ஓடை வழியாக பிச்சாவரம் வரை சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
டால்பின் மீன்களின் அணிவகுப்பு: கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் சனிக்கிழமை காலை விடியல்விழா தொடங்கிய சிறுது நேரத்தில் கடலில் டால்பின் மீன்கள் கூட்டம், கூட்டமாக அணிவகுத்து துள்ளிக்குதித்து விளையாண்டு கடந்து சென்றதை மக்கள் கண்டு அதிசயதித்தனர்.