தற்போதைய செய்திகள்

சினிமா வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல: கமலஹாசன்

திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் இண்டர்நேசனல், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் உத்தம வில்லன். கமல்ஹாசன் கதை, திரைக்கதையில் உருவாகியுள்ள

ஜி. அசோக்

திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் இண்டர்நேசனல், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் உத்தம வில்லன். கமல்ஹாசன் கதை, திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, பூஜாகுமார், ஜெயராம், இயக்குநர் என்.கே.விஸ்வநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார்.

 ஏப்ரல் 10 -ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ள இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் படம் குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதன் விவரங்கள் பின் வருமாறு:

உத்தம வில்லன் குறித்து...?

உத்தம வில்லன் என்கிற படம் அதை விட பெரியதா? இதை விட பெரியதா? என அளவு பார்க்காமல் என்னுடைய வாழ்க்கையில் என்னையும் அறியாமல் அது முக்கியத்துவம் பெற்று விட்டது. இதை எடுக்கும் போது ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் இருந்தோம். அது இப்போது மறக்க முடியாத படமாக எங்களுக்கு மாறியிருக்கிறது. கே.பி.சார் அதில் நடிக்க ஒப்புக் கொண்டதும், நடித்து முடித்துக் கொடுத்ததும் ஆச்சரியமானது. பாதியில் இந்தப் படத்தை நிறுத்த வேண்டி வரும் எனக் கூட அவர் கேட்டார். அவர் எதை மனதில் வைத்து அப்படி சொல்கிறார் என்று தெரிந்தது. அப்படி நிறுத்தினால் கதையை மாற்றி எழுதிக் கொள்கிறேன் சார், தயவு செய்து நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்ட போது, ஒரு வாரம் அவகாசம் எடுத்துக் கொண்டு பின்னர் நடிக்க வந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக டப்பிங்கை முடிக்க சொன்னார். அதன் பின் படத்தை போட்டு காட்டுங்கள் என்றார். இவர் இப்படித்தான் பயமுறுத்திக் கொண்டே இருப்பார் என நிினைத்து விட்டேன். இப்போதைக்கு புலி வராது என்று எண்ணினேன். ஆனால் வந்து விட்டது. இதனால் படம் நன்றாக வந்து விடுமா? என்றால் இல்லை. நல்ல திறமையாளர்கள் இதில் இருக்கிறார்கள். எல்லா பாகங்களிலும், எல்லா கோணங்களிலும் இந்தப் படம் முழுமையாக வந்திருக்கிறது. தேவர் மகன் படத்தை பற்றி பேசப்படும் பேச்சுக்கள் இந்தப் படத்தை பற்றியும் பேசப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

உங்களின் கதாபாத்திர வடிமைப்பு எப்படி வந்திருக்கிறது...?  

ஒரு நடிகனின் கதை. ஒரு நட்சத்திர நடிகனின் கதை. அவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் அடுத்தடுத்து மாற்றங்கள்தான் கதை.  முகமூடியுடனும் முகமூடி இல்லாமலும் காட்சியளிக்கும் வாழ்க்கை. இது என் வாழ்க்கையை தழுவிய கதையா? என்கிறார்கள். என் எல்லா கதைகளிலும் என் வாழ்க்கை கொஞ்சம் இருக்கவே செய்கிறது. என்னில் ஒரு பாதி என் கதைகளில் இருக்கத்தான் செய்யும். எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய எல்லா கதைகளிலும் அவரின் ஒரு பகுதி இருக்கத்தான் செய்யும். அது எங்கே எப்படி என்பது என்னோடு நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும். இது எந்த இந்திய நடிகர் பார்த்தாலும் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியின் பிரதிபலிப்பாக இது இருக்கும். மற்றபடி சினிமாத்துறையை கிண்டலடித்து எடுக்கப்பட்ட படம் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கை.

நடிகராகவே ரமேஷ் அரவிந்த் ரசிகர்களுக்கு அறிமுகம்... இருந்தும், அவர் அப்படி இதில் இயக்குநர்...?

என்னிடம் எப்போதுமே 30 கதைகள் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டிய கதாபாத்திரங்கள் எவ்வளவு இருக்கின்றன? என கேட்பார்கள். அதைக் கேட்டால் எனக்கு சிரிப்புதான் வரும். கதையே என்னிடம் 30 இருக்கும் போது, பாத்திரங்கள் எத்தனை இருக்கும். அந்த மாதிரி பல கதைகள் சொல்லும் போது அவர் இந்த கதையை தேர்வு செய்தார். அவரின் தேர்வு எனக்கு பிடித்திருந்தது. ரமேஸ் அரவிந்த் என்னுடன் பல கதை விவாதங்களில் கலந்து கொண்டவர். பல ஆண்டுகளாக நாங்கள் பேசி வருகிறோம். அதை அவர் தன் சொந்த பயிற்சியாக எடுத்து கொண்டிருக்கிறார். தசவதாரம் , விருமாண்டி என பல படங்களில் அவர் என்னுடன் விவாதம் செய்திருக்கிறார். நான் கதை சொல்லி. அதனால் அதை சொல்லிப் பார்ப்பேன். என் மீது பாசமுள்ளவர்களிடம் கதையை சொல்லிப் பார்ப்பேன். என்ன குற்றம் இருக்கிறது என கேட்பேன். அப்படி பல கதைகளை பேசியிருக்கிறேன். இந்தக் கதையை இயக்க சொன்ன போது அவருக்கு சந்தோசம் மட்டுமே இருந்தது. வியப்பு எதுவும் இல்லை.

பாலசந்தரின் கதாபாத்திரம்...?

மார்க்கதரிசி என்ற கதாபாத்திரம் அவருடையது. அந்தப் பாத்திரம் யாரென்றால் அது நான்தான் என அவரே ஒப்புக் கொண்டுள்ளார். நாங்கள் அவரிடம் பார்த்து வியந்த கதாபாத்திரத்தை அவர் மூலமாக நிழலாட வைத்திருக்கிறோம். அவருக்கு பிடித்திருந்தால் அவருடைய உதவி இயக்குநர்களை சில சமயம் இயக்குநராகவே பணியாற்ற வைப்பார். காலம் சென்ற அமீர்ஜான் கூட அப்படி சில சமயங்களில் இருந்திருக்கிறார். அது என்னைப் போன்ற பலருக்கு அதிர்ஸ்டக்காற்று. அப்படி நான் நேரில் பார்த்த விஶயங்கள்தான் பாலசந்தரின் கதாபாத்திரம். இதற்கு முன்பே அவரை பயன்படுத்திருக்கலாமே? என கேட்பவர்களும் உண்டு. திட்டங்கள் இருந்தன. ஆனால் எல்லாமும் கை நழுவிப் போய் விட்டது. இந்த முறை வாதாடி செய்த விசயம்தான் இது. ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் அவருடையது. இரண்டு விதமான காலக் கட்டங்களில் நடக்கிற இந்தக் கதையை இணைப்பதே அவர்தான்.

கதையின் துவக்கப்புள்ளி எது...? பார்த்த படங்களா...? படித்த இலக்கியமா...?

என்னுடைய எல்லாப் படங்களுமே நான் பார்த்த படங்களின் சாயலும், கேள்விப்பட்ட படங்களின் சாயலும்தான். நான் ஒரிஜினல் கிடையாது. நான் எதையும் சிருஸ்டி செய்ததே கிடையாது. என் அப்பா, அம்மா சாயல் இருக்கும் போதே, நான் ஒரிஜினல் கிடையாது. எதுவரை பார்க்காத மனுசனும் நான் கிடையாது. எல்லா மனிதர்கள் மாதிரிதான் நான் இருக்கிறேன். நல்ல மனிதர்களிடமிருந்து நல்லதையும், கெட்ட மனிதர்களிடமிருந்து கெட்டதையும் எடுத்துக் கொள்ளும் மனிதன் நான். தானே முயற்சி செய்தால் தனி மனித கர்வம்தான் வெளிப்படும். என்னிலிருந்து வெளிப்பட்ட தனித்துவத்துக்குதான் நீங்கள் கமல்ஹாசன் என பெயர் சூட்டியூள்ளீர்கள். என்னை கமல் என யாராவது அழைக்கும் போது, அவர் மூன்றாவது மனிதராகத்தான் தெரிகிறார். என்னை நான் கமல் என நினைத்துக் கொள்வதில்லை. என்னை நான் என்று மட்டுமே நினைத்துக் கொள்கிறேன். பாலசந்தர் சார் சினிமாக்களில் சோகமும், நகைச்சுவையும் கலந்திருப்பதை பார்க்க முடியும். உலக சினிமாக்களில் சாப்ளின் போன்றவர்கள் அதை செய்திருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு படம்தான் உத்தம வில்லன்.

உங்களின் அடுத்தடுத்த படைப்புகளுக்கு இடையூறுகள் வந்துக் கொண்டே இருக்கிறதே...?

என் விலாசம் கேட்டால், இடையூறு என்று சொல்லி விடுவார்கள் போல். எல்டாம்ஸ் சாலை என்பதற்கு பதிலாக நம்பர் 4, இடையூறு தெரு என்று சொல்லுவார்கள் போல் உள்ளது. ஏனென்றால் எதை செய்தாலும் தடை மேல் தடை. தசவதாரம் படத்தின் போது ஒருவர் என் கதை என்று வந்தார். எதற்காக அவர் வழங்கு தொடர்ந்தார். அவரின் பின்னணி என்ன? என்பது வரை எல்லாமும் எனக்குத் தெரியும். மும்பை எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்க கூடாது என்றார்கள். மும்பைக்கு எப்படி தமிழ் வார்த்தை கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அது மாதிரி சண்டியர். அதே பெயரில் இப்போது ஒரு படம் வெளிவந்து விட்டதாக சொன்னார்கள்.

மருதநாயகம்...?

நண்பர்கள் நிறைய பேர் கேட்கிறார்கள். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு பேசி வருகிறேன். இது தமிழ் தமிழ் படம் மட்டுமல்ல. ஆங்கில படம். பிரெஞ்ச் படம் என அவர்களுக்கு நினைவுறுத்தி வருகிறேன்.

விஸ்வரூபம் 2?

எப்போது வரும் என்று ஆஸ்கர் நிறுவனத்துக்குதான் தெரியும். ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். எனக்கும் ஆர்வம் இருக்கிறது. உத்தம வில்லன், பாபநாசம் படங்கள் வெளிவந்த பின்னர் விஸ்வரூபம் 2 வரும். அதன் பின்னும் ஆஸ்கர் நிறுவனம் தாமதித்தால் இன்னொரு படம் வரும்.

தணிக்கை குழு கெடு பிடிகள், கதை திருட்டு, நீதிமன்ற வழக்குகள் என படைப்பாளிகளின் சுதந்திரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறதே...?

படைப்பாளியின் சுதந்திரத்தை தேச முழுவதும் பாதிக்கும் அளவுக்கு தணிக்கை குழு மாறியிருக்கிறது. வெறும் சான்றிதழ் கொடுக்கும் துறையாக இருக்க வேண்டியது தனிக்கை குழுவாக மாறியிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க விசயம். நீ யார் கண்டிப்பதற்கு என்று கேட்டால், நான் கலைஞன் என்று பதில் சொல்லுவேன். நான் ஒரு விசயத்தை சொல்ல துடிப்பவன். மொழி, கலையும் என் கை வசம். அதனால் என் விசயத்தை சொல்ல உரிமை இருக்கிறது. பிரிட்டீஸ் ராஜ்ஜியத்தில் இருப்பது போல் என்ன வார்த்தையை எழுத வேண்டும் என எழுதி காண்பித்து விட்டு, முத்திரை வாங்கி கொண்டு படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. என் பேச்சு சுதந்திரத்தில் அவர்கள் வெகுவாக கால்பதித்து விட்டதாகவே நினைக்கிறேன்.

படம் நஸ்டமடைந்தால் பணம் வேண்டும் என்ற நிலை...?

பணத்தின் மேல் யாருக்குதான் ஆசை இல்லை. அந்த ஆசையில் எல்லோரும் இருக்கிறார்கள் என சொல்ல முடியாது. இந்த குணாதிசயம் படம் பார்க்கும் ரசிகனுக்கு வராமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். பாதி சினிமா பார்த்தேன் பிடிக்கவில்லை. பாதி பணத்தை திருப்பி கொடு என்று கேட்டால் என்னவாகும் என நினைக்கிறேன். ஆனால், அந்த மாதிரி நிறைய படங்களை எடுக்கிறோம். பாதி வரை பார்ப்பது பெரிய விசயமாக இருக்கும் அளவுக்கு படங்களை நாம் எடுக்கிறோம்.

தமிழ் சினிமாவின் வெற்றி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது... தமிழ் சினிமாவுக்கான அழிவின் தொடக்கமாக இது இருக்குமா...?

அழியக் கூடாது என்பதுதான் என் விருப்பம். ஏனென்றால் மொழியின் அழிவையும் அது சுட்டிக் காட்டும் விஷயமாகி விடும். தமிழ் சினிமா என்பது இல்லாமல் போய் விட்டால் தமிழ் இல்லாமல் போய் விடும் என்ற கவலை எனக்கு உண்டு. மொரீசியஸ் நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கே நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் மேல் அவ்வளவு பற்று. ஆனால், அவர்கள் வீட்டில் யாருக்கும் தமிழ் பேச வராது. ஏனென்றால் அங்கே தமிழ்க் கலை சென்று அடையவில்லை. எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததே தமிழ் சினிமாதான். சண்முகம் அண்ணாச்சி உள்ளிட்ட வாத்தியார்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவும் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கி்ன்றன. தமிழ் சினிமா எனக்கு கற்றுக் கொடுத்த தமிழ் எனக்கு மீண்டும் தமிழ் சினிமாவாக மாறிக் கொண்டிருக்கிறது.

சம கால வலியை பதிவு செய்வது சினிமாக்களின் கடமை... ஆனால் ஈழ போரின் பதிவுகள் இன்னும் சினிமாவில் முழுமையாகவில்லையே...?

தொட முடியுமா சொல்லுங்கள்? சுற்றி வளைத்து தொட்டதற்கே பிரச்னைகள் இல்லாமல் என்னால் அணுக முடியவில்லை. தெனாலி படம் அதற்கான உதாரணம். தெனாலியை ஏன் எடுக்க வேண்டும் என கேட்டார்கள். நான் தமிழன். அது என்னுடைய ஆசை. குழந்தை தடுக்கி விழும் போது, அது கிறிஸ்து குழந்தையா? முஸ்லீம் குழந்தையா?  என்று பார்க்க மாட்டோம். குழந்தை என்கிற உணர்வுதான் முதலில் வரும். இந்த உயிர்க்கொல்லல் எந்த இனத்தை சேர்ந்ததாக இருந்தாலும், குரல் கொடுக்க வேண்டிய கடமை 21-ஆம் நூற்றாண்டு மனிதனுக்கு, உலக குடிமகனுக்கான உரிமை. பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளும் எனக்கு நடக்கும் கொடுமைகளாக நான் நினைக்க வேண்டும் என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT