முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி மலைக்கோயில் ரோப்கார் நிலையங்களில் வல்லுனர் குழு ஆய்வு

பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை சென்னை இந்து சமய அறநிலையத்துறை ரோப்கார் வல்லுனர் குழுவினர் ரோப்கார் பெட்டிகளின் இயக்கம் மற்றும் டவர்களை ஆய்வு செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:02 AM
பகிர்:

பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை சென்னை இந்து சமய அறநிலையத்துறை ரோப்கார் வல்லுனர் குழுவினர் ரோப்கார் பெட்டிகளின் இயக்கம் மற்றும் டவர்களை ஆய்வு செய்தனர்.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் வின்ச், படிப்பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.  இரண்டு நிமிடங்களிர் மலைஉச்சியை அடைவதால் ரோப்கார் இயக்கம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இதைத் தொடர்ந்து மலைக்கோயிலுக்கு பிரசாதப் பொருட்கள், அன்னதான பொருட்கள், பஞ்சாமிர்தம், தளவாடப்பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் மெட்டீரியல் ரோப்காரும் வடிவமைக்கப்பட்டது.  கடந்த சிலவருடங்களாக இயங்கி வந்த மெட்டீரியல் ரோப்காரில் சிலதினம் முன் சக்கரங்கள் இயங்கும் டவர் பெட்போல்ட்டுகள் உடைந்ததால் சாய்ந்து விழுந்தது. 

இதில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை எனினும் சென்னை இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து தலைமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் கட்டுமான பொறியியல் வடிவமைப்பு ஆய்வுக் கழக விஞ்ஞானி பழனி, வடிவமைப்புக்குழு பொறியாளர் ரங்கசாமி உள்ளிட்ட ரோப்கார் உயர்மட்ட வல்லுனர் குழுவினர் வெள்ளிக்கிழமை பழனி மலைக்கோயிலுக்கு வருகை புரிந்தனர்.  மெட்டீரியல் ரோப்காரை ஆய்வு செய்த வல்லுனர் குழு பக்தர்கள் பயணம் செய்யும் ரோப்காரின் இயக்கங்களையும் ஆய்வு செய்தனர். 

டவர்கள் அமைந்துள்ள பகுதி, டவரில் உள்ள சக்கரங்கள், அவற்றின் உராய்வுத்தன்மை, மோட்டார் இயக்கம், வடக்கயிறு உள்ளிட்ட பல்வேறு பாகங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  பக்தர்கள் பயணம் செய்யும் ரோப்கார் உறுதியுடன் உள்ள நிலையில் மெட்டீரியல் ரோப்கார் விரைவில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வின் போது பழனிக்கோயில் இணை ஆணையர் இராஜமாணிக்கம், உதவி செயற்பொறியாளர் நாச்சிமுத்து, உதவி ஆணையர் மேனகா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.