சிதம்பரத்தில் கோஷ்டி மோதல்: 5 பேர் காயம், 15 பேர் கைது
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் எம்ஜிஆர் தில்லைக்காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (19). கேஸ் கம்பெனியில் வேலைபார்க்கும் இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்து விட்டு தில்லைக்காளியம்மன் கோயில் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த வேலு (23) என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்து சுதுமார் மீது மோதுவது போல் நிறுத்தியுள்ளார். இதுகுறித்து சுகுமார் தட்டிக்கேட்டதில் ஆத்திரமடைந்த வேலு தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் வந்து சுகுமாரை தாக்கியுள்ளார்.அப்போது சுகுமாரின் ஆதரவாளர்கள் வள்ளி, விஜய், விமல், சின்னராது ஆகியோரின் தடுத்துள்ளனர். அவர்களையும் அக்கும்பல் தாக்கிவிட்டு, அங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மரையும் சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகினர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மோதலில் படுகாயம் அடைந்த சுகுமார் உள்ளிட்ட 5 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகுமார் தரப்பினர் தாக்கியதில் வேலு தரப்பை சேர்ந்த அண்ணாகுளம் புவனேஸ்வரன் என்பவர் படுகாயம் அடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து இருதரப்பினர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தனி, தனியே புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் இருதரப்பினர் 21 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் வேலு (23), கலையரசன் (17), கருணாசாகர் (18), பூபதி (20), அப்பு(21), சூர்யா (18), ஜீவா (19), பிரபாகரன் (19), கனகராஜ் (23), விக்கி(23), வெங்கடேசன் (21), மாணிக்கம் (21), வினோத் (21), சதீஷ் (21), அப்பு (19) ஆகிய 15 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இருதரப்பினர் மோதலால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.