பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கைவிட வேண்டும்: பண்ருட்டி தி.வேல்முருகன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்தியஅரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்தியஅரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியஅரசு கடந்த 15 நாளுக்குள் பெட்ரோல் விலையை 7 ரூபாய் 10 காசும், டீசல் விலையை 5 ரூபாய் 10 காசும் உயர்த்தியுள்ளது. இந்த அநியாய விலைஉயர்வை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மே மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றியமைத்திருப்பதற்கு எண்ணெய்
நிறுவனங்கள் கூறியுள்ள காரணம் இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் ஆகும்.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது போல் காட்டிக் கொண்ட மோடி அரசு, கடந்த ஓராண்டு கால ஆட்சியில் பெட்ரோல் விலையை 15 ரூபாய் 5 காசும், டீசல் விலையை 11 ரூபாய் 15 காசும் உயர்த்தியிருப்பதுதான் உண்மை. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையைக் காரணம் காட்டும் எண்ணெய் நிறுவனங்கள் தம்மிடம் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்துமா?.
மத்திய அரசு மக்களின் வாழ்க்கை வசதிகளையும் வருமானத்தையும் சர்வதேசத சந்தையைக் காரணம் காட்டி உயர்த்த முன்வருமா? எனக் கேட்க விரும்புகிறேன்.
பெட்ரோல் டீசல் மீதான சுங்க வரியையும் இந்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகிறது. இது அனைத்து பொருள்களின் விலையையும் உயர்த்தி விடும் என்றும், சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்று என்பது அரசுக்குத் தெரியாதா? வளர்ச்சிக் கொள்கை என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு மக்கள் மீது மேலும் மேலும் சுமையேற்றி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனவே மத்தியஅரசு
பெட்ரோல் டீசல் விலையுயர்வைக் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.