தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்திட வாழ்த்துக்கள்: பண்ருட்டி தி.வேல்முருகன்
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மக்களுக்கு நல்லாட்சியை தொடர்ந்திட வாழ்த்துக்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மக்களுக்கு நல்லாட்சியை தொடர்ந்திட வாழ்த்துக்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சதிகளை தகர்த்து சரித்திரம் படைத்து நல்லாட்சியை தொடர்ந்து வழங்கிட மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்கள் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகாலம் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரோடும் சிறப்போடும் செயல்படுத்தி வந்துள்ளது. உலகத் தமிழினமே கையறு நிலையில் நின்ற போது, இதோ உங்களுக்காக இந்த தமிழக அரசு இருக்கிறது என்று தாயுள்ளத்தோடு ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு உற்ற துணையாக ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்து பேராறுதலையும் பெருநம்பிக்கையும் அளித்ததை தமிழினம் என்றென்றும் நன்றியோடு நினைவில் கொள்ளும்.
அதேபோல் 23 ஆண்டுகாலம் தூக்கு கொட்டடியில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மற்றும் ஆயுள்சிறைவாசிகளாக இருந்த நளினி உள்ளிட்ட நால்வர் என 7 தமிழர்களையும் விடுதலை செய்வதாக மற்றுமொரு மாந்த நேயமிக்க ஒட்டுமொத்த தமிழினமே உச்சிமோந்து வரவேற்று கொண்டாடிய சரித்திரம் மிக்க தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் ஜெயலலிதா.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழகத்து ஆற்று நீர் உரிமை பிரச்சனைகள் உள்ளிட்ட வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் உறுதியான அனைத்துவகையான போராட்டங்களையும் முன்னெடுத்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு. இடையிலே சிறிது காலம் எதிரிகளின் சதிகளால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லாட்சிக்கு இடையூறு ஏற்பட்ட போதும் அந்த தடைகளையெல்லாம் தகர்த்து எறிந்துவிட்டு மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று தமிழகத்தின் நிரந்தர முதல்வராக தமிழக மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத் தமிழ் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தற்போது நான் பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு கலந்து கொண்டு வருகிறேன். இங்குள்ள உலகத் தமிழர் இயக்கங்கள், தமிழின உறவுகள் அனைத்தும் தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து பேருவகையும் பெருமகிழ்வும் அடைந்து வருவதையும் தங்களது மேலான பார்வைக்கும் கொண்டு வருகிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், அவரது தலைமையிலான தமிழின நலன் காக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்தும் உறுதுணையாக அரணாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.