கருப்பாநதி அணை நிரம்பியது: உபரி நீர் ஆற்றில் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழைக்கு முதலாவதாக 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழைக்கு முதலாவதாக 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 134 கனஅடி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது. இதனிடையே 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.
நிகழாண்டில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் முதலாவதாக கருப்பாநதி அணை நிரம்பியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 134 கனஅடி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: பாபநாசம் அணையில் 50 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 35 மி.மீ, சேர்வலாறு அணையில் 14 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 15 மி.மீ, கருப்பாநதி அணையில் 2 மி.மீ, அடவிநயினார் அணையில் 3 மி.மீ, நம்பியாறு அணையில் 5 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 30 மி.மீ மழையும், ராதாபுரத்தில் 14 மி.மீ, நான்குனேரியில் 27 மி.மீ, களக்காட்டில் 53.6 மி.மீ, திருநெல்வேலியில் 6 மி.மீ, பாளையங்கோட்டையில் 17 மி.மீ மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6.1 மி.மீ, திருச்செந்தூர் 8 மி.மீ, காயல்பட்டினம் 6 மி.மீ, சாத்தான்குளம் 39.6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அணைகளின் நீர்வரத்து: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 900 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 275 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு 30 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 64 கனஅடி, ராமநதி அணைக்கு விநாடிக்கு 29 கனஅடி, வடக்குப்பச்சையாறு அணைக்கு 53 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 41 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 86.45 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 99.64 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 65.80 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 74 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 73 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 71.52 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 104.25 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 26 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13.19 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 29.50 அடியாகவும் இருந்தது.