விருதுநகர் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வில் 1785 பேர் தேர்வு எழுதினர்
விருதுநகர் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வு தேர்வில் 1785 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வு தேர்வில் 1785 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் பல்வேறு தேர்வுகளை பள்ளிக் கல்வி துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், சிறப்பிடம் பெறுகிறவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்து ஊக்கப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரக திறனாய்வு தேர்வை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்து 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றும், 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இம்மாவட்டத்திலிருந்து இத்தேர்வு எழுதுவதற்காக ஆன்லைன் மூலம் 2032 பேர் வரையில் விண்ணப்பித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இத்தேர்வு அருப்புக்கோட்டை எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் எஸ்.எச்.என்.மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ்.இந்து மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.பி.நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் நடைபெற்றது.
இத்தேர்வில் மொத்தம் 1785 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். அதில், 247 பேர் வரையில் பங்கேற்கவில்லை. இத்தேர்வு நடைபெற்ற மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமசந்திரன்(விருதுநகர்), நாராயணசாமி(அருப்புக்கோட்டை), முனியசாமி(ஸ்ரீவில்லிபுத்தூர்)உள்பட அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர்.
இத்தேர்வில் வெற்றி பெறும் தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, 9-ம் வகுப்பு தொடங்கி, தொடர்ந்து பிளஸ்2 வரையில் ஆண்டுதோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.