மலையடிவாரத்தில் வன விலங்குகள் அட்டகாசம்:நெல்லை குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
வனத்துறை சார்பில் நடைபெற்ற குறை தீர் கூட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதால் விளைப் பொருட்கள் சேதமடைந்து இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
திருநெல்வேலி: வனத்துறை சார்பில் நடைபெற்ற குறை தீர் கூட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதால் விளைப் பொருட்கள் சேதமடைந்து இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பாளையங்கோட்டையில் மாவட்ட வன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட வன அலுவலர் டி. சம்பத் தலைமையில் நடைபெற்றது.
உதவி வனபாதுகாவலர் (பயிற்சி) போஸ்லேசச்சின், வனச்சரக அலுவலர்கள் ஏ.வி. தார்சியுஸ் (திருநெல்வேலி), எம். பாலேந்திரன் (கடையநல்லூர்), செந்தட்டிக்காளை (சிவகிரி), வனவர்கள் செந்தில்குமார், சரவணக்குமார், அதிகாரிகள் மற்றும் ஊத்துமலை, புளியரை, புளியங்குடி, செங்கோட்டை, தென்கலம், ஆலங்குளம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியது: மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழகம், கேரள மாநில எல்லையில் ஸ்ரீமூலபேரி அணைக்கட்டு அமைந்துள்ளது. அப்பகுதி வழியாக மலையடிவாரத்திற்குள் புகுந்து சிறுத்தைப் புலிகள் மாடு, நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது.
தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் பனை, தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்துகின்றன. விளை நிலங்களில் மயில், காட்டுப்பன்றிகள் புகுந்து அழித்து வருகின்றன. குரங்குகள் தென்னை மரங்களில் தேங்காயினை சேதப்படுத்தி அழிக்கின்றன.
பூலான்குடியிருப்பு அருகே பட்டுப்பூச்சி பண்ணையிலிருந்து கோட்டைவிளை வரை அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் இருந்து பேட்டரி திருடப்பட்டதால் மின் வேலி சேதமடைந்ததால், விலங்குகள் எளிதில் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
வனவிலங்குகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால், 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்செய்துள்ள விளைப் பொருட்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு
பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மலையடிவாரப் பகுதியில் கூண்டுகள் வைத்து அட்டகாசம் செய்யும் வன விலங்குகளை பிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும்.
வனத்துறை அதிகாரி: விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூண்டு வைத்து அட்டகாசம் செய்து வரும் விலங்குகளை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.
மாதந்தோறும் நடத்த வலியுறுத்தல்: விவசாயிகள் பயனடையும் வகையில் மாதந்தோறும் 2 ஆவது செவ்வாய்க்கிழமை வனத்துறை சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி, கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற குறை தீர்க்கும் கூட்டத்தினை ஒவ்வொரு மாதமும் நடத்தி விவசாயிகள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் வலியுறுத்தினர்.