விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில்: கார்த்திகை மகாதீபம் பக்தர்கள் பரவசம்
விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கார்த்திகை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை மகாதீபம் பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் திங்கள்கிழமை நடைபெற்றது.
விராலிமலை,
விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கார்த்திகை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை மகாதீபம் பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் திங்கள்கிழமை நடைபெற்றது.
விராலிமலை அருள்மிகு சுப்பிரணியர் சுவாமி மலைக்கோயில், புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான திருகோயில்களில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும், முருகனின் ஆறுபடைவீடுகளுக்கு இணையாக கருதப்படும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதகராக சுப்பிரமணியர் ஆறுமுகங்களுடன் காட்சியளிப்பது மேலும் இக்கோயிலின் சிறப்பு. இந்தியாவின் தேசியபறவையும், முருகனின் வாகனமுமான மயில்கள் இம்மலையை சுற்றி கூட்டம் கூட்டாமாக சுற்றி திரிவதும், தோகை விரித்தாடுவதும் பார்பவர்களின் மனது பரவசமடையும்.
207 படிகள் கொண்ட இம்மலை கோயிலுக்கு உள்நாடுகளில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருடம் தோறும் வந்து சுவாமி வழிபாடு செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்காண விழா அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு முருகனுக்கு வெள்ளிகாப்பு அலங்காரத்துடன் பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
முற்பகல் முதலே மலைக்கோயிலில் பக்தர்கள் குவியத்தொடங்கினர். அதனைத் தொடர்ந்தது மாலை 6.07 மணிக்கு, மலைமேல் உள்ள ராஜகோபுரம் மேற்புற மண்டபத்தில் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட கார்த்திகை தீப கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் அடிவாரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதகராக சுப்பிரமணியர் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தீபத்திருவிழாவை காண்பதற்கு பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வழிகள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உபயதாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் விபூதி, பொங்கல், புளியோதரை, சுண்டல் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஆர். பாண்டியராஜூ, மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து, கிரிவலக்குழுத்தலைவர் வி. முருகேசன் உள்ளிட்ட கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.