நெல்லை மாவட்டத்தில் குறைந்து வரும் அணைகளின் நீர்மட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு தினம் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. பாசனத்துக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு தினம் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. பாசனத்துக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
2015 இல் தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட 95 சதவீதம் கூடுதலாக பெய்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட 12 அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியது. பருவ மழை கூடுதலாக பெய்ததால், நிகழ் பிசான பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 62 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டது. முன் கூட்டியே நடவு செய்த இடங்களில் தற்போது அறுவடை தொடங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 235.26 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 35 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பாசனத்துக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 1007.25 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு 30 கனஅடி, பிரதான கால்வாய் பாசனத்துக்கு 445 கனஅடி, கடனாநதி அணையில் 60 கனஅடி, ராமநதி அணையில் 20 கனஅடி, கருப்பாநதி அணையில் 25 கனஅடி, அடவிநயினார் அணையில் 20 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணையில் 80 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 110.25 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 114.34 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 104.45 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 57.60 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 48.75 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 39.53 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 26.89 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 88 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 43.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 20.15 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 38.50 அடியாகவும் இருந்தது.
பிரதான அணைகளின் நீர்மட்டம் தினம் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டை விட நிகழாண்டில் நீர் இருப்பு கணிசமாக இருப்பதால் குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் இல்லை என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.