பொது சிவில் சட்டம் இயற்றும் முயற்சி வேண்டாம்: கருணாநிதி
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பது என்பது குளவிக் கூட்டில் கை வைப்பதற்கு ஒப்பானது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பது என்பது குளவிக் கூட்டில் கை வைப்பதற்கு ஒப்பானது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
சட்ட ஆணையத்துக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கெüடா எழுதியிருக்கும் கடிதத்தில், பொது சிவில் சட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளார்.
உண்மையில், நம் நாட்டின் உரிமையியல் சட்டங்களில் 99 சதவிகிதம் எல்லோர்க்கும் பொதுவான சட்டங்களாகவே உள்ளன. தொழில் நடத்துதல், கொடுக்கல் வாங்கல், வாடகை, சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அனைவருக்கும் பொதுவான சட்டங்களே பின்பற்றப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக ஒரு முஸ்லிம், வங்கியில் வாங்கிய கடனை முறையாகத் திரும்பச் செலுத்தாத நிலையில், வட்டியுடன் கடன் தொகை அதிகரித்து, வழக்கு மன்றத்துக்குப் போகும்போது, இஸ்லாம் மார்க்கத்தில் வட்டி வாங்குவதும், கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதால், வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாது என வாதிட முடியாது.
திருமணம், மணவிலக்கு, வாரிசுரிமை, வக்ப் சொத்துகளின் நிர்வாகம் இவற்றில் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு மார்க்க அடிப்படையிலான தனியார் சட்டங்களை இந்திய அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது.
இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், இன்ன பிற பிரிவினர்களுக்கும் அவர்களுக்கென சிறப்புத் தனியார் சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
தாய்லாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், எத்தியோப்பியா, உகாண்டா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இது அந்த நாடுகளின் ஒருமைப்பாட்டுக்கு எந்த வகையிலும் ஊறு செய்யவில்லை.
இந்தியாவுக்கு, உலகில் ஏனைய நாடுகளுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு நம் நாட்டின் பன்முகத்தன்மையாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது வேர்க் கொள்கை. இதை மிகச் சரியாக உணர்ந்திருந்த நமது முன்னோர் சட்டங்களிலும், அதைப் பிரதிபலிக்கச் செய்துள்ளனர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை பாலின சமத்துவத்துக்காக பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்கிறது.
ஆனால், பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் மக்களும் சமூக நீதியாளர்களும், சாதி மத நல்லிணக்கம் வேண்டுவோரும் நீண்டகாலமாகவே கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
1972 ஆகஸ்ட் 20-ஆம் தேதி தீனதயாள் உபாத்யாய ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, ஆர்.எஸ்.எஸ். பிதாமகர்களின் முக்கியமானவரான குரு கோல்வால்கர், பாரத ஒற்றுமையைப் பாதுகாக்க பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்பது தவறு. இயற்கைக்கு எதிரானது. விபரீத விளைவுகளை உண்டாக்கக் கூடியது என்று கூறியுள்ளார். இதனை பாஜகவினர் உணர வேண்டும்.
பொது சிவில் சட்டம் தொடர்பாக முதலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும், நாட்டின் அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலும், இந்தச் சட்டத்துக்கு சட்டக் கமிஷனின் பரிந்துரையைப் பெறுவது என்பதைவிட, பல்வேறு சமயங்கள் மற்றும் சாதிகளிடையே தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறைகளையும், நெடுங்காலப் பழக்க வழக்கங்களையும் ஒருங்கிணைத்து அனைவருக்கும் பொதுவானதொரு சிவில் சட்டத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அப்படிச் செய்வது என்பது எளிதான காரியம் இல்லை.
எனவே, சிக்கலான இந்தப் பிரச்னையைக் கையிலெடுக்க முயற்சிப்பது குளவிக் கூட்டுக்குள் கையை விடுவதற்கு ஒப்பானதாகும் என்று அவர் கூறியுள்ளார்.