ஸ்ரீநடராஜர் கோயில் "ஆனித்திருமஞ்சன தரிசனம்": பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர்.
ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 9-ம் தேதி சனிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து தரிசித்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. சிதசபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிஸ பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3.40 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர்.
பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ஜூலை 11-ம் தேதி திங்கள்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் பட்டுமமி தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் நடேஸ்வர தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.
சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேல் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அன்னதானம்: கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கிழக்கு கோபுர வாயிலில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதான நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் ஏ.யாகமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் பி.சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் வி.சங்கர், கே.கணேசன், என்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.