முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? நெல்லையில் த. வெள்ளையன் பேட்டி

வரும் பேரவைத் தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

வரும் பேரவைத் தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார்.

உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமி்ழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் த. வெள்ளையன், தமிழகம் முழுவதும் சில்லரை வணிகத்தை பாதுகாப்போம், உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்போம் என்ற கோஷங்களுக்கு மோட்டார் சைக்கிள் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இம்மாதம் 1 ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த பயணம் வியாழக்கிழமை (மார்ச் 10) கன்னியாகுமரியில் நிறைவடைகிறது. செவ்வாய்க்கிழமை இப்பிரசாரப் பயணம் திருநெல்வேலி பாளையங்கோட்டைக்கு வந்தது. திருநெல்வேலி மாவட்ட வர்த்தக் கழகம் சார்பில் வெள்ளையனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில் வெள்ளையனுடன் அமைப்பின் நிர்வாகிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது வெள்ளையன் அளித்தப் பேட்டி: புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் உலக வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் அமல்செய்து 25 ஆண்டுகள் ஆகிறது. தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்கிற போர்வையில் இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் மூலம் பாரம்பரிய விவசாயத் தொழில், சிறு குறு தொழில்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. குளிர்பானங்கள், தரமற்ற பொருட்கள், விவசாயத்திற்கு தரமில்லாத விதைகளை வழங்கி கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து விட்டன. எனவே மக்கள் விரோத உலக வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வரும் பேரவைத் தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும். உலக வர்த்தக ஒப்பந்தத்தை அரசியல் கட்சிகள் எதிர்க்காத நிலையில் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவை அறிவிப்போம். 

ஆன்லைன் வர்த்தகத்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆகவே மக்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வணிகர்களை பாதிக்கும் வணிக நிறுவனங்களில் கணினி மயமாக்குதல் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். உலக வர்த்தக ஒப்பந்த குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  தமிழகம் முழுவதும் 1500 கி.மீ தொலைவுக்கு உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு பயணத்தை இம்மாதம் 1 ஆம் தேதி தொடங்கி மேற்கொண்டுள்ளோம். இப்பயணம் வரும் 10 ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →