தற்போதைய செய்திகள்

அப்போ, வீட்டைச் சுத்தி தண்ணி இருந்தது குடிக்க முடியல; இப்போ கையில காசு இருக்கு செலவு பண்ண முடியல...!

கடந்த 2015-ஆம் ஆண்டு இதே மாதத்தில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள், மக்கள் அனுபவித்த துயரங்கள் எண்ணில்

ஆர். வெங்கடேசன்

கடந்த 2015-ஆம் ஆண்டு இதே மாதத்தில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள், மக்கள் அனுபவித்த துயரங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஆண்டும் அதே மாதத்தில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் அன்றாடம் பெறும் துன்பங்கள் ஏராளம். அதனை மனிதாபிமானத்தோடு நிற்காமல், நடந்து முடிந்த பேரழிவையும் தற்போது நடைபெற்றும் ரூபாய் விவகாரத்தில் தினமொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு வரும் உண்மையான பின்னணியோடு அரசியல் ரீதியிலும் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு எந்தவிதமான செயல்பாடுகளிலும் இருவிதமான கண்ணோட்டங்களை வளர்க்கும் வேலையைதான் அரசும் ஊடகங்களும் செய்து வருகின்றன.

”இயற்கையை எதிர்த்து மனிதன் என்ன செய்ய முடியும்?”, “மனிதன் பேராசையால் ஏரி குளங்களை ஆக்கிரமித்துக் கொண்டதன் பலனை அனுபிக்கிறான்” என்பதான சமாளிப்புகள் இயற்கையையும் மக்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது.

அன்றும் இன்றும் குறித்த ஒரு மேலோட்டமான அலசல்....

கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத துவக்கம் வரை வங்க கடலில் ஒன்றன் பின் ஒன்றாக உருவெடுத்த காற்றழுத்த தாழ்வு நிலைகள், மண்டலங்கள் வட தமிழகத்தில் கன மழையாகவும் தென் தமிழகத்தில் மிதமான மழையாகவும் பொழிந்தன. இதில் நவம்பர் மாதம் 8,9,12,13,14,15 மற்றும் 23-ஆம் தேதிகளில் மிக கடுமையான மழை பொழிவு இருந்தது. மீண்டும் நவம்பர் 30 அன்று துவங்கிய மழை, டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி மாலை வரை கொட்டித் தீர்த்தது.

அக்டோபர் இறுதியில் துவங்கிய பருவமழைக் காலத்தில் தமிழகம் முழுவதிலும் 485 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடந்தாண்டு பெய்த மழையின் அளவு 438 மி.மி. நவம்பர் மாதம் மட்டும் சென்னையில் பெய்த மழையின் அளவு 1218 மி.மி.

ஆனால், சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளத்திற்கு இந்த மழை தான் காரணமா? இல்லை. மழை வெள்ளத்தால் நிரம்பிய நீராதாரங்கள் கையாளப்பட்ட விதமும், வெள்ள வடிகால்களில் கைவிடப்பட்ட பராமரிப்புப் பணிகளும் தான் இந்தப் பேரிடருக்கான மிக முக்கியமான காரணிகள். இதில் குறிப்பாக நவம்பர் 17 மற்றும் டிசம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் சென்னையை மூழ்கடித்த வெள்ளத்திற்கு செம்பரம்பாக்கம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர்தான் முதன்மையான காரணமாக அனைத்து தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை நகரைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலத்திற்கு முன் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த கால்வாய்கள் மற்றும் வடிகால்களை தூர்வாறும் பணி நடைபெற்றாக வேண்டும். அதாவது, ஒவ்வொரு நாளும் மலம் கழித்து குடலை சுத்தம் செய்வதைப் போல் இந்தப் பணி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடந்தாக வேண்டும்.

ஆனால், நகராட்சி மற்றும் மாநகராட்சியின் சார்பாக கால்வாய் தூர்வாறுவது சீரமைப்பது போன்ற வேலைகளைச் செய்யாமலேயே மக்கள் பிரதிநிதிகள் போலியான பில்களை சமர்பித்து மேற்படி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைக் கொள்ளையடித்துள்ளனர். இதன் காரணமாகதான் வரலாறு காணாத கனமழையில் சென்னை மற்றும் தமிழகம் பாதிக்கப்பட்டது.

நவம்பரில் கொட்டித் தீர்த்த பருவமழை குறிப்பாக செம்பரம்பாக்கம் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகளவாக இருந்தது. இதன் விளைவாக, செம்பரம்பாக்கம் அணை அம்மாத துவக்கத்திலிருந்து மிக வேகமாக நிரம்பத் துவங்கியது. நவம்பர் 16, 17 தேதிகளில் அணை அதன் முழுக்கொள்ளளவான 3.5 டி.எம்.சி அளவை அடைகிறது. இதில், நவம்பர் 16-ல் வெளியேற்றப்பட்ட நீரின் அளவோடு அதற்கு மறுநாள் வெளியேற்றப்பட்ட நீரின் அளவையும் நவம்பர் 27-ல் இருந்து டிசம்பர் 1-ஆம் தேதி வரை வெளியேற்றப்பட்ட நீரின் அளவோடு டிசம்பர் 2-ஆம் தேதி வெளியேற்றப்பட்ட நீரின் அளவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டதல்ல என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

இதே காலகட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மட்டுமின்றி மற்ற அடையாறு நதியின் கலக்கும் மேலும் 200 ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பொழிந்துள்ளது என்பதையும் சேர்த்துக் கணக்கிட்டால் டிசம்பர் 2-ஆம் தேதி அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படியே செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவோடு மற்ற ஏரிகளின் உபரி நீரும் கலந்துள்ளது. குறிப்பாக அத்தனூர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் அடையாறில் கலந்துள்ளது. இதன் காரணமாகத் தான் சென்னை நகரமே வெள்ளக்காடானது.

மேலும், அடையாறில் வழக்கத்திற்கும் மேலாக சிறிய அளவு அதிக தண்ணீர் ஓடினாலே அதன் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதை பொதுப்பணித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவர். அப்படியிருக்கும் போது, ஒரே நாளில் திடீரென மிக அதிகளவில் தண்ணீரைத் திறந்து விடும் முட்டாள்தனத்தை ஏன் செய்தனர்?

ரூபாய் நோட்டு விவகாரத்தில் நவம்பர் 8-ஆம் தேதி இதுவரை வெளியிடப்பட்டுள்ள அதிரடி அறிவிப்பு அலசல்கள்...
கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ளநோட்டுகள் புழக்கத்தைத் தடுப்பதற்காகவும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவந்த மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்று முதலில் பார்க்கலாம்.

- பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மக்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
- பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ள அடையாள அட்டையுடன், விண்ணப்பம் ஒன்றையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
- இந்த அறிவிப்பினால் இணைய வழி பணபரிமாற்றங்கள், செக் மற்றும் காசோலை பணபரிமாற்றங்கள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யப்படும் தொகை கண்காணிக்கப்படாது என்றும், அதற்கு மேல் செய்யப்படும் தொகை குறித்து அரசு ஆய்வு நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல சட்டத்துக்குப் புறம்பான வகையில் சேர்க்கப்படும் பணத்துக்கு அதிகபட்சமாக 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
- பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள், வரி செலுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24 வரை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
- சில்லறை தட்டுப்பாடால் நாடு முழுவதுமுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் நவம்பர் 18 வரையும், விமானநிலைய பார்க்கிங் கட்டணம் நவம்பர் 24 வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மையங்களில் மேற்கொள்ளும் அனைத்து பரிமாற்றங்களுக்கான சேவைக்கட்டணம் டிசம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.


- வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு கைவிரலில் அடையாள மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் பதிவு செய்து, விளைபொருளை விற்கும் விவசாயிகள் வாரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை காசோலையாகவோ, வங்கிக் கணக்கி‌ல் இணைய தள பரிமாற்றம் மூலமாகவோ பெற அனுமதிக்கப்படும். காசோலையை வங்கியில் செலுத்தி, அவர்கள் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
- வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் பதிவு பெற்ற விளைபொருளைக் கொள்முதல் செய்யும் வணிகர்கள் வாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
- விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுக்கான பீரிமியத்தைச் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

- பயிர்க் கடனுக்கான அனுமதியைப் பெற்ற விவசாயிகள், தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் கடன் தொகையில் வாரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, அதிகம் பேர் வங்கிக் கவுன்ட்டரை அடையும் வகையில், ஒருவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த உச்ச வரம்பு, இன்று முதல் 2 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. கைவிரலில் மை வைப்பதன் மூலம் ஒருவர் ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பை பெற முடியும். அதற்கு மேற்பட்ட தொகைக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து பிறகு எடுத்துக் கொள்ளலாம்.
- திருமணத்துக்காக பணம் தேவைப்படுவோர் ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து அதி‌கபட்சமாக இரண்டரை லட்ச ரூபாயை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். திருமணம் தொடர்பான ஆவணங்களை இதற்கு சான்றளிக்க வேண்டும்.
- மத்திய அரசு ஊழியர்களில் சி பிரிவு வரை உள்ளவர்கள், அலுவலகம் வாயிலாக முன்பணமாக ரூ.10,000 வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த முன்பணம், அடுத்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

அன்றும் இன்றும்...


- அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வங்கி கணக்கு எண், குடும்ப அட்டகளை கேட்டார்கள் இன்று நோட்டுகளை மாற்ற முன்வரும்போது, பான் அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு அடையாள அட்டைகளைக் கொண்டுவருவது அவசியம் என அறிவித்துவிட்டார்கள்.
- அன்று சென்னை மாநகரில் மாநகர பேருந்தில் பயணிக்க ஒரு வாரம் கட்டண சலுகை அளிக்கப்பட்டது. இன்றைக்கு விமான டிக்கெட்டுகள், ரயில்வே முன்பதிவுகள், அரசு பேருந்து டிக்கெட்டுகள் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லபடியாகும் என அறிவிக்கப்பட்டது.
- அன்று கனமழை காரணமாக ஏடிஎம் மையங்களில் நோட்டு இருந்தது பயன்படுத்த முடியவில்லை. இன்று மக்கள் கணக்கில் நோட்டு இருக்கு ஏடிஎம் இயந்திரங்களில் நோட்டு இல்லை
- நிவாரண நிதி 5 ஆயிரத்தைப் பெற சிறப்புப் படிவத்தை பூர்த்தி செய்து நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தார்கள். இன்று தங்கள் கணக்கில் உள்ள நோட்டுகளை எடுத்து பயன்படுத்த நீண்ட வரிசையில் வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்கள் முன் இரவு பகலாக காத்துக்கிடக்கிறார்கள்.
- வருமானத்துக்கு பொருந்தாமல் பணம் டெபாசிட் செய்தால் வரியுடன் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை.
- அன்று இரு சக்கர வாகனங்களை பழுது நீக்கிக்கொள்ள முகாம் நடைபெற்றது. இன்று மக்கள் சம்பாதித்த நோட்டுகளை பெற அலுவலகங்களில் முக்கிய நகரங்களிலும் மொபைல் ஏடிஎம் மையங்கள் முகாம்.

- அன்று மழைக்காக பள்ளி, அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று நோட்டுக்காக வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு விடுமுறை.
- அன்று கன மழையால் பல ஆயிரம் கோடி நஷ்டம். இன்று ஒரே நாளில் ரூ.480 கோடி புதிய நோட்டுகள் விநியோகம்.
- அன்று விரைவில் அனைவருக்கும் நிவாரணம் அளிக்கப்படும் அறிவிப்பு. இன்று புதிய அம்சங்களுடன் 50, 100 ரூபாய் நோட்டுகளும் விரைவில் வெளியிடப்படும். ஏடிஎம் மையங்களில் கிடைக்கும் என அறிவிப்பு.
- அன்று மின் கட்டணம், வங்கிகளில் பெற்ற கடன்களை தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம். இன்றும் அதே கால அவகாசம்.
- அன்று வங்கி கடன்களை, விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரி வழக்கு. இன்று 500, 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு.
- அன்று நோட்டு இருந்தது உணவில்லாததால் மாநிலத்தின் பிற பகுதியைச் சேர்ந்த நல்ல உள்ளங்கள் உதவியது. இன்று நோட்டு இருந்தும் சில்லறை இல்லாததால் திருநெல்வேலியில் ஒரு ஹோட்டலில் பணம் பெறமால் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

- அன்று கனமழையால் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஒரே நாளில் ரூ.22 கோடி வரை விற்பனை பாதிப்பு.
- அன்று லாரிகள் இயங்காததால் லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி இழப்பு. கடந்த சில நாட்களாக 1 லட்சம் இயங்காததால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு.
- அன்று நடைபாதைவாசிகள், ஏழைகள் நிவாரணம் நிதியைப் பெற வரிசையில் நின்றார்கள். இன்று கள்ளப் பணத்தை மாற்றும் செயலில் சில வரிசையில் ஈடுபட்டு வருவதாக புகார்.
- அன்று நிவாரணம் மற்றும் கடன் உதவிகள் அளிக்கக்கோரி மக்கள் மன்றங்களில் எதிர்க்கட்சிகள் முழக்கம். இன்று ரூபாய் நோட்டுகள் அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்.
- அன்று நிவாரண நிதியைப் பெற்று மது வாங்கி குடித்தார்கள் குடிமகன்கள். இன்று புதிய ரூ.2000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மது வாங்கி குடிக்கிறார்கள் குடிமகன்கள்.

- அன்று நிவாரணம் அளிக்க பல இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. இன்று நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் போதுமான அளவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
- அன்று நிவாரண நிதிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இன்று பொதுமக்கள் வைத்திருக்கும் பணங்களை திருப்பி செலுத்தவும், புதிய ரூபாய் நோட்டுகளை பெற வங்கிகள் முன்பு காத்திருப்பு.
- அன்று நிவாரண நிதியைப் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு. இன்று பணம் மாற்றத்தில் வங்கிகளில் கூட்ட நெரிசலைத் தடுக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு.
- அன்று அரசு ஊழியர்கள் சம்பள கணக்கில் இருந்து முன்பணம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு. இன்று மத்திய அரசின் குரூப்-சி ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினர் தங்கள் சம்பள கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு.
இப்படியே தொடர்கிறது காத்திருப்பும்... கால் கடுப்பும்...

ஊழலை அகற்றுவதற்கும், கருப்புப் பணத்தை அழிப்பதற்கும், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்குமான நடவடிக்கையாகவும், இந்தியாவை ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கை என்று மோடி விளக்கமளித்துள்ள மோடிக்கு ஒரு கேள்வி.
அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்படுவது இது முதல் முறை அல்ல மோடிஜி. ஏற்கனவே, 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுகள் கடந்த 1978-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஜனதா ஆட்சிக் காலத்தின்போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. அப்போதும் கருப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது உங்களுக்கு தெரியாதா?

தேசத்தைக் கட்டமைப்பதிலும், மறுநிர்மானம் செய்வதிலும் வரலாற்றில் எப்போதாவதுதான் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறும் மோடி அவர்களே
இதற்கு முன்பு அந்த வாய்ப்பை மக்கள் அளிக்க வில்லையா.. பொறுத்துக்கொள்ளவில்லையா..? இந்த அறிவிப்புக்கு பின்னர்தான் உங்கள் மாநிலத்தில்தான் அதிக கருப்பு நோட்டுகள் வெளிவந்துள்ளது உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் இதற்கு முன்பு அந்த மாநில முதல்வராகதான் இருந்தீர்கள் என்பதாவது உங்களுக்கு நினைவில் உள்ளதா?  

புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதே அப்போதெல்லாம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லையே ஏன்? அப்போது நாட்டை நிர்வகித்தவர்கள் திறமையற்றவர்களா?

ஒரு சில கருப்புப் பண முதலைகளைப் பிடிப்பதற்காக 120 கோடி மக்களை பணயம் வைக்கும் மோடி அவர்களே, நாடு முழுவதும் புதன்கிழமை முதல் நடக்கவிருந்த திருமணங்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சைகள் என அவசிய, அத்தியாவசிய நிகழ்வுகள் தடைப்பட்டு மக்கள் கதறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதே இதற்கு என்ன நிவாரணம் அளிக்க போகிறீர்கள்.

இதுபோன்ற அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையால், நடுத்தர வர்க்க மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதே அவர்களுக்கு உங்கள் விளக்கம்தான் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை அச்சடித்துள்ள ரூபாய் நோட்டுகளிலேயே மிகவும் அதிக மதிப்புடைய தொகை 10 ஆயிரம் ரூபாய்க்கானதாகும். அது 1938-ஆம் ஆண்டிலும் பின்னர் 1954-ஆம் ஆண்டும் அச்சடிக்கப்பட்டன. எனினும், 1978-ஆம் ஆண்டில் அந்த நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு கடந்த 1946-ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்தில் இருந்த சில நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

கடந்த 1946-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பு ரூ.1,000, ரூ.10,000 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. பின்னர், அதிக மதிப்பிலான ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 ஆகிய நோட்டுகள் 1954-இல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன.

பின்னர் கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பரில் 1000 ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.500 நோட்டு, கடந்த 1987-ஆம் ஆண்டில் புழக்கத்துக்கு வந்தது. அப்போதும் கருப்பு பணத்தை ஒழிக்கதான் இந்த நடவடிக்கை என்றார்கள் ஆட்சியாளர்கள். இப்போது புதிய ரூ.2000 நோட்டை அறிமுகம் செய்துள்ள நீங்களும் அதே கதையைதான் கூறுகிறார்கள்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் அதிகமதிப்புடைய நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்த நவீன கால துக்ளக் மோடி அவர்களே, ரூ.2000 நோட்டை அறிமுகப்படுத்துவது எதற்காக? புதியதாக வந்துள்ள அந்த நோட்டுகளை கருப்புப் பணமாக எவரும் பதுக்கி வைக்க முடியாதா?  அரசியலில் பணம் பாய்வது எவ்வாறு தடுக்கப்படும்?

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளால் பொதுமக்களின் பையில் பணம் இருந்தாலும், அப்பணத்தை யாரும் வாங்காததால் செலவு செய்ய முடியாத நிலைமை உருவாகி உள்ளதே ஏன்?

உங்களின் அதிரடி அறிவிப்பிற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தனது மகள் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் பிரமாண்டமான முறைகளில் நடத்தியுள்ளாரே அது எப்படி? அவருக்கு எப்படி, எங்கே இருந்து செலவிற்கு பணம் வந்தது? செல்லாத கருப்பு பணத்தை எல்லாம் செல்லும் வெள்ளைப்பணமாக மாற்றியது எப்படி?

உங்கள் அதிரடி அறிவிப்புக்கு பின்பு பெரிய பணக்காரர்கள், பைனான்சியர்கள் கருப்பு பணமுதலைகள் வெகு சுலபமாக கருப்பு பணத்தை வெள்ளையாக்குகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளதே அதை உங்களால் தடுக்க முடியுமா?

ரெகுலராக பணத்தேவைக்கு வருபவர்கள் 30 சதவீதம் பேருதான். புரோக்கர்கள் மூலம் இது போன்ற கருப்புப்பணத்தை மாற்றுபவர்கள் தான் மீதியுள்ள 70 சதவீதம் இதை ஏனோ வருமான வரித்துறையினர் கண்டுக்கொள்ளவில்லையே ஏன்?

ஒவ்வொரு வங்கி வாசலிலும் , ரிசர்வ் வங்கி வாசலிலும் இது போன்ற புரோக்கர்களால் இதுவரைக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் இப்படி வெள்ளையாக்கப்பட்டிருக்கலாம் என்பது உங்கள் நிர்வாகத் திறமைக்கு எட்டவில்லையா?

ஏழை மக்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லாவிட்டால் என்ன; கேக் சாப்பிடுங்களேன் என்று பிரெஞ்சு புரட்சி காலகட்டத்தில் அந்நாட்டின் மகாராணி கூறியதை போல, இப்போது கையில் ரூபாய் நோட்டு இல்லாவிட்டால் என்ன, பிளாஸ்டிக் ரூபாய் வரப் போகிறது, அதைப் பயன்படுத்துங்கள் என்று இந்திய ஏழைகளை ஏளனம் செய்யும் மோடி அவர்களே, பெருநிறுவன முதலாளிகளின் ஆயிரம் பேரின் வீட்டிலும் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடத்துவதை விடுத்து 99 சதவீத மக்களை அவதிக்குள்ளாக்கியிருக்கிறீர்களே ஏன்?

பணத்தை மாற்றுவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அத்யாவசிய பொருட்கள், மருத்துவமனை செலவு மளிகை சாமான் என அன்றாட தேவைகளுக்காகவும் கையிலிருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகள் முன்பு கால்கடுக்க காத்திருப்பது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. இந்த நிலையில் சிலர் முறைகேடாக வங்கியில் பணத்தை மாற்றி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு எந்த நிபந்தையும் கிடையாதாம். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் இக்பால் மெஹ்மூத், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக இரவு நேரத்தில் வங்கிக்கு சென்று மாற்றியுள்ளரே எது எப்படி?

மத்திய அமைச்சர்கள் தங்களுடைய செலவுக்கு எப்படிப் பணத்தை மாற்றுகின்றனர். அவர்கள் தங்கள் வீட்டுக்குள்லே பணத்தை மாற்றுகின்றனரா?

தேசம் தேசமாக தனி விமானத்தில் சுற்றி வரும் மோடி அவர்களே, வங்கிகள் முன்பும், ஏடிஎம் மையங்கள் முன்பும் கால் கடுக்க காத்திருக்கும் காட்சி தனி விமானத்தில் சென்று பார்வையிட தவறியது ஏன்?

ஒவ்வொரு வங்கி வாசலிலும் , ரிசர்வ் வங்கி வாசலிலும் இது போன்ற புரோக்கர்களால் இதுவரைக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் இப்படி வெள்ளையாக்கப்பட்டிருக்கலாம் என்பது உங்கள் நிர்வாகத் திறமைக்கு எட்டவில்லையா?

அப்படியானால் அரசாங்கம் என்னதான் மாற்றம் கொண்டு வந்தாலும் அதையும் மாற்றி அதிலும் காசு பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், இவர்கள் தான் விஷக்கிருமிகள் இவர்கள் காசுக்காக எதையும் செய்வார்கள் இவர்களை உங்கள் அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாதது ஏன்?

"ஊசியில் போன அவன் நூலில் போவான்" என்று கிராமத்து பழமொழி ஒன்று உண்டு இதுக்கு அது பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் வெறும் 400 கோடிதான் கள்ள நோட்டுகள் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மிகச் சொற்பமானவர்களை பிடிப்பதற்காக, 98 சதவீதம் மக்கள் தங்களது உழைப்பை மூலதனமாகக் கொண்டு சிறுகச் சிருகப் பணம் சேர்த்து வைத்திருக்கும் சாமானிய மக்களை அவதிக்குள்ளாகி வருவதை சகித்துக்கொள்ள முடியாது.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கையகப்படுத்தி உள்நாட்டுக் கொண்டு வருவோம். குடிமக்களுக்குத் தலா ரூ.15 லட்சம் தருவோம் என்று கூறிய மோடி அவர்களே, கருப்புப் பணத்தை ஒழிக்க துல்லியத் தாக்குதல் நடத்த வேண்டுமானால் பெருநிறுவன முதலாளிகளின் ஆயிரம் பேரின் வீட்டிலும் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடத்தலாம். அதை விடுத்து 98 சதவீத மக்களை வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் அதிகாலை முதல் இரவு வரை கால் கடுக்க காத்திருக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்.

உங்களின் அதிரடி அறிவிப்பால், நாட்டில் தற்போது, புழக்கத்தில் உள்ள 17  லட்சடம் கோடி ரூபாயில், 85 சதவீதம் ரூ.1000, ரூ.500 நோட்டுக்களாகும். இவை அனைத்தும் வங்கிகளுக்கு வந்துவிடும், டெபாசிட்கள் என்ற பெயரில் வங்கியில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்.

பணவீக்கம் குறைவு, மக்கள் கையில் பணத்தட்டுப்பாடு, பொருளாதார சுணக்க நிலை ஆகியவை மிகக்குறுகிய காலத்துக்கு மட்டுமே ஏற்படும். அதன்பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிட, வங்கியில் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டு, கடன் எளிதாக்கப்படும். இதன் மூலம் வங்கியில் கடன் பெற்று இருந்தால் கடனுக்கான வட்டி குறையும். வங்கியில் கடன் பெற நினைப்போருக்கு கடன் கிடைப்பது எளிதாகும்.

நாட்டுமக்களின் பணப்புழக்கம் குறைந்து, வேறு வழியின்றி, பெரும் பகுதி மக்கள் மின்னனு பரிமாற்றத்தை நாடத் தொடங்குவர். இதன் மூலம் முறைப்படுத்தப்பட்ட, நிதிவழியை மக்கள் தேர்வு செய்யும் போது, படிப்படியாக பணவீக்கம் கட்டுக்குள் வந்து பொருட்கள் விலை குறையும், வங்கியில் கடனுக்கான வட்டியும் குறையும். பணத்தை ரொக்கமாக அத்தியாவசியப் செலவுக்காக மட்டுமே எடுப்பார்கள். அனைத்துக்கும் மின்னனு பரிமாற்றத்தை நாடுவார்கள் என்று நினைக்கிறீர்கள் போலும்.

இதனிடையே பொருளாதார வல்லநர்கள் கருத்துக்களை வீச தொடங்கி விட்டார்கள். அதாவது மக்கள் கையில் தற்போது பணப்புழக்கம் குறுகிய காலத்துக்கு சுருங்கிவிட்டதை நினைத்தும், நம் பணத்தை நம்மால் எடுத்து அவசரத்துக்கு செலவு செய்ய முடியவில்லை என்பதை வருந்தியும், அனைத்திலும் அரசு கட்டுப்பாடு கொண்டு வந்துவிட்டது என புலம்ப வேண்டாம்.

பொருளாதார ரீதியாக பார்க்கும் போது மோடியின் இந்த நடவடிக்கை நாட்டு மக்களுக்கு கொஞ்ச காலத்துக்கு தொந்தரவையும், சவுகரியக் குறைவையும் கொடுத்தாலும், நீண்ட காலத்தில் செயற்கையான விலை உயர்வை மக்கள் எதிர்நோக்க மாட்டார்கள். பொருளாதார வளர்ச்சி  தற்போது குறுகிய காலத்துக்கு இறுக்கிப்படித்தாலும், அடுத்த சில மாதங்களில் மீண்டும் வேகமெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான பணம் மட்டுமே இந்த நடவடிக்கையால் இருக்கும். தேவையில்லாத பணம், அதாவது, கள்ள நோட்டு, கருப்பு பணம் தானாகவே வடிகட்டப்படும். அதனால், அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரம் எனும் சக்கரம் லகுவாக சுழல இந்த நடவடிக்கை நிச்சயம் துணைபுரியும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

இதுவொரு நல்ல திட்டம் தான் என்றாலும், இதில் எந்த ஒரு பணக்காரரும் பாதிக்கப்பட்டது போல் தெரியவில்லை, ஏழைமக்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவதாக தெரிய வருகிறது.

எது எப்படியோ, இந்த அரசியல்வாதிகளின் திறமையற்ற நிர்வாகத்தால் ஊழலை ஒழிக்கவோ, பதுக்கலை தடுக்கவோ முடியாது. மேலும் கல்வியில், விவசாயத்தில், விவசாயிகளின் வாழ்க்கையில் மற்றும் சிறு வணிகர்கள், ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்துக்கான மாற்றத்தை தர முடியாது என்பதும்  யார் ஆட்சி நிர்வாகத்திற்கு வந்தாலும் காத்திருப்பும் கால் கடுப்பும் தொடரும் என்பதும்தான் நிதர்சனம்.

எல்லாம் சரி, அது என்ன அனைத்து அதிரடி அறிவிப்புகள், இயற்கை சீற்றங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் நவம்பர் டிசம்பர் மாதங்களிலே நடைபெறுகின்றனவே எப்படி. இவை வரும் ஆண்டுகளிலும் தொடருமா என்பதை, எவ்வளவோ காத்திருப்பையும், கால் கடுப்பையும் அனுபவித்த நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

மாற்றம் முன்னேற்றத்தை தந்தால் மகிழ்ச்சிதான்.

கடவுள் இருக்கான்டா குமாரு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT