சென்னையிலிருந்து அந்தமானுக்கு சென்ற விமானப்படை விமானத்தில் பயணித்த 29 பேரும் இறந்திருக்கலாம் என்று அவர்களது குடும்பத்தினரிடம் விமானப்படை தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்குக் கடந்த ஜூலை 22-ஆம் தேதி புறப்பட்ட இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன்-32 ரக விமானம் நடுவானில் மாயமானது. பல நாள்கள் ஆகிவிட்டதால் அதில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்த விமானத்தைத் தேடும் பணியில் கடற்படையைச் சேர்ந்த அதிநவீன விமானங்கள் ஈடுபட்டும் இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இந்நிலையில், விமானத்தில் பயணித்த 29 அதிகாரிகர்களின் குடும்பத்தினருக்கு விமானப்படை சார்பில் கடந்த 24ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அவர்கள் இறந்துவிட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தடயம் கிடைக்கும் வரை விமானத்தைத் தேடும் பணி தொடரும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடலுக்கடியில் 3,500 கிலோ மீட்டர் ஆழத்துக்குள் விமானம் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களால்கூட விமானம் எங்குள்ளது என்பதைத் தேடுவது மிகவும் கடினம். மலேசியாவில் "எம்எச்370' ரக பயணிகள் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுவரை அந்த விமானம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அட்லாண்டிக் பெருங்கடலில் ஏர் பிரான்ஸ் விமானம் விழுந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதன் பாகங்கள் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வங்காள வரிகுடாவில் "சிஜிடிஓ92ஜே' ரக விமானம் மாயமானது. 34 நாள்களுக்குப் பிறகுதான் அந்த விமானம் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.