இன்று முதல் முழக்கப் போராட்டம்: தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை அம்பத்தூரில் வியாழக்கிழமை (ஏப். 6) முதல் தொடர்ந்து தினமும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.
விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை அம்பத்தூரில் வியாழக்கிழமை (ஏப். 6) முதல் தொடர்ந்து தினமும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் வே.துரைமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் பெற்ற எல்லா கடன்களையும் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் இழப்புக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அம்பத்தூர் உழவர் சந்தை அருகில், ஏப்ரல் 6 முதல் 12ஆம் தேதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.