இடைநிலை ஆசிரியர்களுக்கிடையை ஊதிய முரண்பாடு: சென்னையில் ஏப்.23-ல் கவனஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு
1.6.2009 க்குப் பின்னர் நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் பணியில் உள்ளவர்களுக்கும் இடையேயுள்ள ஊதிய முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி சென்னையில்
தற்போதைய செய்திகள்இடைநிலை ஆசிரியர்களுக்கிடையை ஊதிய முரண்பாடு: சென்னையில் ஏப்.23-ல் கவனஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு
1.6.2009 க்குப் பின்னர் நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் பணியில் உள்ளவர்களுக்கும் இடையேயுள்ள ஊதிய முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி சென்னையில்
1.6.2009 க்குப் பின்னர் நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் பணியில் உள்ளவர்களுக்கும் இடையேயுள்ள ஊதிய முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி சென்னையில் ஏப்ரல் 23ம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரம் மேற்கொள்ள உள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜா.ராபர்ட், இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2009 ஆண்டில் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் 7123 இடைநிலை ஆசிரியர்களும், அதன் பின்னர் 2012, 2014 ஆண்டுகளில் தகுதித் தேர்வின் அடிப்படையில் சுமார் 14 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களையும் அரசு நியமித்தது.
மத்திய அரசின் 6-வது ஊதிய குழு பரிந்துரைகள் கடந்த 1.6.2009 முதல் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.5200-20200 என்றும், தர ஊதியம் ரூ.2800 என்றும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300 என்றும், தர ஊதியம் ரூ.4200 என்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வேறுபாடு உள்ளது. மத்திய அரசுக்கு வழங்கப்படும் ஊதியம் போன்று தங்களுக்கும் வழங்க வேண்டும் என பல ஆசிரியர்கள் அமைப்புகள், அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக ராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்தது. அதன் பரிந்துரையின் பேரில் சாதாரண நிலையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 சிறப்பு ஊதியமும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்பு ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டது. இதிலும் முரண்பாடுகள் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து முரண்பாடுகளை மறுபரிசீலனை செய்து அதனை நீக்க அப்போதைய நிதித்துறை செயலாளர் (செலவினம்) கிருஷ்ணன் தலைமையில் 3 நபர் குழு அமைக்கப்பட்டு, ஓராண்டுக்குப் பின்னர் கிருஷ்ணன் தலைமையிலான குழு கூடி தனது பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில் தமிழக அரசு 88 அரசு ஆணைகளை பிறப்பித்தது.
இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது. 1.6.2009 க்கு முன்னால் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 4800-2800 என்றும், ஊதியம் ரூ.4800 வுடன் 1.86 சதவீதம் இணைத்து ஏனைய படிகள் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. 1.6.2009 க்குப் பின்னர் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு 5200-2800 என ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது. இதில் ஒரே தகுதி, ஒரு வேலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனத்தின்போதே மாதம் ரூ.3170 வித்தியாசம் உள்ளது.
மாநிலத்தில் ஒரே கல்வி தகுதியுடன், ஒரே பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் இடையே அடிப்படை ஊதியத்தில் மட்டும் ரூ.3170 வேறுபாடு உள்ளது. மத்திய அரசு ஊதியமும் வழங்கவில்லை, மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியருக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை.
எனவே இந்த ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய 2016 பிப்ரவரி 20 முதல் 28 வரை 8 நாட்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். போராட்டத்தில் உள்ள நியாயத்தையும் தீவிரத்தையும், உணர்ந்த அரசு 2017 பிப்ரவரி 28 இல் எழுத்துப் பூர்வமாக 2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 7 ஆவது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் களைய பரிந்துரை செய்யப்படும் என்ற உத்திரவாதத்தினை அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தற்போது 7 ஆவது ஊதிய குழு அமைக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ள நிலையில் 1.6.2009-க்கும் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் 7ஆவது ஊதியக்குழுவில் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் அரசின் கவனத்தை ஈர்க்க ஏப்ரல் 23-ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.
மேலும் 2009 ஆண்டில் மாநில அளவிலானபதிவு மூப்பு அடிப்படையில் 7123 ஆசிரியர்களும், அதன் பின்பு 2012, 2014 தகுதித் தேர்வின் அடிப்படையில் சுமார் 14,000 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மிகவும் குறைந்த அளவில் உள்ள எங்களது கோரிக்கையினை ஏற்று எங்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றாலும் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.