நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தென்றல் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக புதுவை தென்றல் நகரில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் இன்று அகற்றினர்.
நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக புதுவை தென்றல் நகரில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் இன்று அகற்றினர்.
புதுவை 45 அடி சாலை தென்றல் நகர் சந்திப்பில் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக புதுவை பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டது.
அப்போது சாலை சந்திப்பில் உள்ள 2 இருசக்கரவாகனம் பழுதுபார்க்கும் கடைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் பொதுப்பணித் துறைக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதனைதொடர்ந்து அந்த 2 இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைகளையும் அகற்றும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறையின் மத்திய பிரிவு செயற்பொறியாளர் கலைமாறன், உதவி பொறியாளர் கன்னியப்பன், இளநிலை பொறியாளர் தேவதாஸ் ஆகியோர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது அங்கிருந்த மின்கம்பம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வேறு இடத்தில் மாற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது. இந்த சாலையில் இருந்த இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைகளினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் நாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தோம். பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம் இதுகுறித்து நாங்கள் முறையிட்டதும், அவர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார் எனத்தெரிவித்தனர்.
உடனே சாலை விரிவாக்க பணிகள் தொடங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.