நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக அங்கு பராமரிக்கப்படும் வன விலங்குகள் தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெப்ப மண்டல எல்லைக் கோட்டில் அமைந்துள்ள கோடியக்கரை, கோடியக்காடு பகுதியில் உலர் பசுமைமாறாக் காட்டுப் பகுதி வன உயிரின பாதுகாப்பு சரணாலயப் பகுதியாக திகழ்கிறது.
இந்த சரணாலயத்தில் அரிய வகையான வெளிமான், புள்ளிமான் போன்றவை அதிக எண்ணிக்கையில் பாதுகாக்கப்படுகின்றன. இவை தவிர, மட்டக் குதிரைகள், குரங்குகள், காட்டுப் பன்றி உள்ளிட்ட பல வகையான காட்டு விலங்குகள் ஏராளமாக உள்ளன.
இந்த நிலையில், கடந்த பல மாதங்களாக வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உலர் பசுமைமாறாக் காட்டுப் பகுதியில் வழக்கத்தைவிடவும் மோசமான வறட்சி நிலவுகிறது.
சரணாலயத்தில் காணப்படும் 154 வகையான மூலிகைகள் உள்பட பல்வேறு வகை மரங்கள் வெப்பத்தின் காரணமாக கருகி பட்டுப்போகும் அளவில் காணப்படுகின்றன.
வனப் பகுதிக்குள் உள்ள குட்டைகள் வறண்டுபோயுள்ளதால், விலங்குகள் பருக போதிய அளவு தண்ணீர் இல்லாமல் அவை பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை எதிர்கொள்ள வெளியிடங்களில் இருந்து வனத் துறையினர் மூலம் டேங்கர் லாரிகளில் எடுத்து வரப்படும் தண்ணீர் காட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் ஊற்றப்படுகிறது. நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் லிட்டர் என்ற அளவில் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றப்படுவதாக கூறப்பட்டாலும், இது யானை பசிக்கு சோளப்பொரி கதையாகவே உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கோடியக்கரை - வேதாரண்யம் பிரதான சாலை பகுதியில் குட்டைகள், தொட்டிகள் அமைந்துள்ள இடங்களுக்குத் தண்ணீர் தேடி ஒரேநேரத்தில் ஏராளமான விலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து காத்துக்கிடக்கும் நிகழ்வு அன்றாட காட்சியாகி வருகிறது. கூட்டமாக வரும் குதிரை போன்ற விலங்குகள் சாலைகளில் நிற்பதால் பேருந்து, வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.
இதுகுறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறியது:
வனப் பகுதிக்குள் விலங்குகள் வழக்கமாக தண்ணீர் குடிக்கும் குளம், குட்டைகள் 58 இடங்கள் உள்ளன.
இவற்றில் சிலவற்றில் குறைவான தண்ணீர் உள்ளது. சாலை ஓரத்தில் உள்ள 3 தொட்டிகள், வனத்தின் உள்பகுதியில் உள்ள 4 தொட்டிகளில் வனத்துறை மூலம் 4 ஆயிரம் லிட்டர், தனியார் நிறுவனம் மூலம் 6 ஆயிரம் லிட்டர் என நாள்தோறும் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுகிறது.
குதிரைகள் வழக்கமாக அதிகளவில் தண்ணீர் குடிக்கும் இயல்புடையவை. இவை 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சாலையோர பகுதிக்கு வந்து விடுகின்றன. இதைத் தவிர்க்க தண்ணீரின் அளவு கூடுதலாக்கப்படும் என்றார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சாலையோரப் பகுதியில் உள்ள தொட்டி, குட்டைகளில் தண்ணீர் இல்லாத நிலை காணப்பட்டது. தண்ணீரை தேடி தொட்டிகளின் அருகே குதிரைகள், பன்றி, குரங்கு, மயில் உள்ளிட்டவை காத்திருந்து பரிதாபமாக ஒலி எழுப்பிய காட்சி காண்போரை வேதனையடையச் செய்தது.
வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கும் சரணாலயப் பகுதியை உயர் அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, ஊற்றப்படும் தண்ணீரின் அளவை கூடுதலாக்கவும், இந்தப் பணி முழுமையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.