விராலிமலை சுப்பிரமணியர் கோயில் தைப்பூசத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் தைப்பூச தேரோட்டம் பக்தர்களின் விண்ணைமுட்டும் அரோகரா சரணகோஷத்துடன் நடைபெற்றது.
விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் தைப்பூச தேரோட்டம் பக்தர்களின் விண்ணைமுட்டும் அரோகரா சரணகோஷத்துடன் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் தைப்பூச விழவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆண்டு தோறும் தைப்பூச விழா இக்கோயிலில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்காண விழா கடந்த ஜன 31-ம் தேதி மலைக்கோயில் மேல் உள்ள சுப்பிரமணியர் சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானை விக்ரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது, அதனைதொடர்ந்து தினமும் சுவாமி காலை, மாலை வேளைகளில் மயில், பூதம், நாகம், சிம்மம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் ரதாரோகணம் எனும் திருத்தேரோட்ட தேர்வடம் பிடிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது இதில் வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சமேதகராக தேரில் எழுந்தருளினார். அதனைதொடர்ந்து 10.07 மணிக்கு வட்டாட்சியர் சதிஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் வி. செல்வராஜ், த. சுப்பிரமணியன், ஆத்மா குழுத்தலைவர் எஸ். பழனியாண்டி, அபூர்வாபாஸ்கர் உள்ளிட்டோர் தேர்வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்,
பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் விராலிமலையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேர் சரியாக 11. 27 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மெய்கண்ணுடையாள் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது,
பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் காவல் துணைகண்காணிப்பாளர் எம். தமிழ்ச்செல்வன் தலைமையில் காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன்(அன்னவாசல்) ஜெகதீசன்(விராலிமலை) மேற்பார்வையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் இளைஞர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல்அலுவலர் ஆர். பாண்டியராஜூ, மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.