தற்போதைய செய்திகள்

காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தினமணி

காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமாகவும், வீர விளையாட்டாகவும் விளங்கி வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள தடைகளை அகற்றி, பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டை நடத்திட சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டி, சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுற்றுத்தியும், தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும், இன்று திமுகவின் சார்பில், சென்னை, மாம்பலம் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின் , அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று கடந்த 3 ஆம் தேதியன்று மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தி, அதனுடைய தொடர்ச்சியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வற்புறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.

அதன் உச்சகட்டமாக தமிழக இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் இணைந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தொடர்ந்து கடந்த நான்கு, ஐந்து நாட்களாக நடத்தி வருவது, உள்ளபடியே எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்த இளைஞர்களையும், மாணவர்களையும் மனதாரப் பாராட்டுகிறோம்.

அந்தப் போராட்டத்தை தொடங்கிய நேரத்திலேயே, திமுகழகத்தின் சார்பில் நான் நேரடியாகச் சென்று, அவர்களுக்கு வாழ்த்துகளை சொல்லி, ’1965 ஆம் ஆண்டு எப்படி தமிழகத்தில் மொழிப்போர் ஏற்பட்டு, அந்தப் போராட்டத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தன்னலம் கருதாமல், தமிழ் மொழியை காக்க தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடிய நிலையில், எப்படி ஒரு மிகப்பெரிய, எழுச்சியான போராட்டத்தை நடத்தினார்களோ, அதுபோலவே, இப்போதும் அந்த உணர்வை மீண்டும் காணக்கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி இருக்கிறது’ என்று குறிப்பிட்டு, அவர்களை பாராட்டி விட்டு வந்தேன்.

ஆக, அதனுடைய பிரதிபலனாக, பிரதிபலிப்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிலைகளை எடுத்துச் சொன்னபோது, ”உச்ச நீதிமன்றத்தில் இந்தப் பிரச்னை இருக்கின்ற காரணத்தால், இதில் தலையிட முடியாது” என அறிவிக்கப்பட்டதாக கேள்விப்பட்டவுடன் நாம் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் ஆளானோம்.

ஆனால் மீண்டும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு, மாநில அளவிலேயே அதற்கான சட்டத்தை இயற்றக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது. உள்ளபடியே இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு மட்டுமல்ல, வரக்கூடிய எந்த ஆண்டிலும் பொங்கல் விழா நடைபெறும் போது, எந்த நிலையிலும் தடைபட முடியாத அளவுக்கு, ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்காக, மத்திய தனது அறிவிக்கையில், காளைகள் ’காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட வன விலங்குகள்’ என்ற பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நோக்கம்.

ஆகவே, அதனை வலியுறுத்தக்கூடிய வகையில், நாளைய தினம் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்திருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை எனது தலைமையில் நடத்துவதென முடிவு செய்து அதனை அறிவித்து இருக்கிறோம். அந்த போராட்டம் நாளைய தினம் நடைபெற இருக்கிறது.

இன்று கூட மெரினா கடற்கரையில் போராடிக்கொண்டு இருக்கக்கூடிய மாணவர்கள், இளைஞர்களை அரசின் சார்பில் சந்தித்து, ’போராட்டத்தை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தபோது, அவர்கள், ’வாடி வாசலில் காளை மாடுகள் அவிழ்த்து விடக்கூடிய நிலை வருகின்றபோதுதான் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம்’, என்று அறிவித்து இருக்கிறார்கள்.

ஆகவே, அந்த அறிவிப்பினை திராவிட முன்னேற்றக் கழகம் பாராட்டுகிறது, வரவேற்கிறது. அவர்களது கோரிக்கைக்கு திமுக நிச்சயம் தொடர்ந்து துணை நிற்கும் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் பொங்கலுக்கு முன்பே வந்திருக்கலாமே, அப்போது செய்யாமல் இப்போது மட்டும் எப்படி செய்வதாக கூறுகிறார்கள்?

பதில்: அதற்கு காரணம் தமிழக அரசும், மத்திய அரசும் தான். பொங்கலுக்குள் அதை செய்யாமல் கால தாமதம் செய்திருந்தாலும், மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்டாலின் தலைமையில் தி.நகர் ரெங்கநாதன் தெரு அருகில் திரண்ட திமுகவினர், அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று மாம்பலம் ரெயில் நிலைய வாயிலை அடைந்தனர். அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த காவல்துறையினரின் தடுப்புகளை அகற்றி விட்டு, நடைமேடை மேல் ஏறி மாம்பலம் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்த மு.க.ஸ்டாலினும், திமுக தொண்டர்களும், கடற்கரை - தாம்பரம் இடையே பயணிக்கும் மின்சார ரயிலை மறித்து, தண்டவாளத்தில் அமர்ந்து, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, தமிழகம் முழுவதும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT