பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரம்: அருண் ஜேட்லி கடும் கண்டனம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டி இந்தியப் பகுதிக்குள் 250 மீட்டர் ஊடுருவி வந்து பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரின் தலைகளை பாகிஸ்தான்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டி இந்தியப் பகுதிக்குள் 250 மீட்டர் ஊடுருவி வந்து பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரின் தலைகளை பாகிஸ்தான் படையினர் துண்டித்துள்ளனர். அதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் படையினரின் இந்த அராஜக செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட்டியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்திய நிலைகள் மீது ராக்கெட்டுகளை வீசியதுடன், தானியங்கி துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர்.
இதில் சீக்கிய படைப்பிரிவைச் சேர்ந்த சுபேதார் பரம்ஜித் சிங், பிஎஸ்எஃப் படைப்பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர் பிரேம் சாகர் ஆகிய 2 பேர் பலியாகினர். பிஎஸ்எஃப் காவலர் ராஜீந்தர் சிங் என்பவர் காயமடைந்தார்.
பாகிஸ்தான் படையினரின் இந்த அத்துமீறலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் (பொறுப்பு) அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வீரர்களின் சடலங்கள் சிதைக்கப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டமாகும். இதை இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தாக்குதல்கள், போர் காலத்தில் கூட நடைபெற்றது இல்லை. இதுவொரு கண்டிக்கத்தக்க மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும்.
இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண்போகாது; பாகிஸ்தான் படையினரின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்திய பாதுகாப்புப் படை தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ஒட்டுமொத்த நாடும் நம்புகிறது என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.