சென்னை கீழ்ப்பாக்கம் அருகே சாலையில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே டெய்லர்ஸ் சாலை சந்திப்பின் இன்று பூந்தமல்லி சாலையில் 10 அடி ஆழம், 6 அடி விட்டத்தில் திடீர் பள்ளம்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அருகே டெய்லர்ஸ் சாலை சந்திப்பின் பூந்தமல்லி சாலையில் 10 அடி ஆழம், 6 அடி விட்டத்தில் இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மெட்ரோ மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியியல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் டெய்லர்ஸ் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மெட்ரோ ரயில் பணி நடந்துவரும் சாலைகளில் அடிக்கடி இதுபோன்ற திடீர் பள்ளம் ஏற்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோன்று கடந்த மாதம் (ஏப் 9) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லியை நோக்கி வந்துகொண்டிருந்த 25 ஜி மாநகரப்பேருந்து சர்ச் பார்க் பள்ளி, அமெரிக்க தூதரகத்துக்கு இடையே உள்ள பேருந்து நிறுத்த சாலையில் திடீரென ஏற்பட்ட 8 அடி பள்ளத்தில் மாநகரப் பேருந்தின் முன்பகுதி, பின்னால் வந்த கார் ஆகியவை சிக்கின. காரிலிருந்த மாதவரத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் தப்பினார். திடீர் பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து, கார் ஆகியவை கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
சாலையின் அடிப்புறத்தில் உள்ள மண்ணின் ஈரப்பதமும், கெட்டித்தன்மை இல்லாமல் இருப்பதும் பள்ளம் ஏற்பட காரணமாக உள்ளது.
இந்தச் சம்பவத்தை அரசு அனுபவப் பாடமாக எடுத்துகொண்டு இனி இதுபோன்ற பள்ளம் ஏற்படாதவாறு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் போல் இனிவரும் காலங்களில் ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.