நெல்லையில் அரசு போக்குவரத்து அலுவலகத்தில் ஜப்தி!
விபத்தில் கால் இழந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில்
திருநெல்வேலி: விபத்தில் கால் இழந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற உத்தரவுப்படி பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இட்டமொழி சாலையை சேர்ந்தவர் சிவசாமி மகன் ஆறுமுகம் (54). இவர் கங்கைகொண்டானிலுள்ள தனியார் டயர் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவர், அந்தோணிராஜ் என்பவருடன், கடந்த 2.5.2014 அன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.
சாத்தான்குளம் திருநெல்வேலி பிரதானச் சாலையில் பேய்க்குளத்தில் சென்று கொண்டிருந்தபோது, திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் நோக்கி சென்று அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், ஆறுமுகத்திற்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சையின்போது, அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இழப்பீடு கேட்டு ஆறுமுகம் திருநெல்வேலி சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் கால் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆறுமுகத்திற்கு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் ரூ. 7.70 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என 19.1.2015 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் அரசு போக்குவரத்துக் கழகம் ஆறுமுகத்திற்கு இழப்பீடு வழங்காத நிலையில் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. 2 வருடமாகியும் அரசு போக்குவரத்துக் கழகம் நிர்வாகம் இழப்பீடு வழங்கவில்லை.
இழப்பீடு வழங்காததால் ஆறுமுகத்திற்கு வட்டியுடன் சேர்த்து போக்குவரத்துக் கழகம் ரூ. 9 லட்சத்து 95 ஆயிரத்து 225 வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நீதிமன்ற ஊழியர் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவகத்திலுள்ள மேஜை, நாற்காலி, கணினி உள்ளிட்ட அசையும் பொருட்களை ஜப்தி செய்தனர்.
அப்போது ஆறுமுகம் கூறியது: தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தேன். விபத்தில் வலது கால் துண்டிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு கால் இல்லாததால் தொடர்ந்து தவழ்ந்து செல்வதால் எனது மற்றொரு காலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்ணீருடன் தெரிவித்தார்.